ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை

292

 

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் மொஸ்கோ நகரில் மத்திய பகுதியில் கிரம்ளின் மாளிகை அருகே காரில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கியால் நான்கு முறை சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்த தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

யுக்ரெயினில் இடம்பெறும் யுத்தத்துக்கு எதிராக மொஸ்கோவில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு அவர் ஆதரவை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

எனினும் இந்த கொலை சம்பவத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அத்துடன்,  அவரின் எதிரிகள் சிலர் கூலிப்படையை வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் தனிக்கட்டுப்பாட்டின் கீழ் அவரது மரணம் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

(இரண்டாம் இணைப்பு)

ஊக்ரைன் போரை எதிர்த்த ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி சுட்டுக்கொலை

ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான பேரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) , மொஸ்கோவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் நடைபெறும் போருக்கு எதிராக மொஸ்கோவில் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த, சில மணி நேரங்களில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின், இந்த கொலையை கண்டித்துள்ளார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி புட்டின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் திமித்திரைி பெஸ்கேவ் கூறியுள்ளார்.

இது ஒரு ஒப்பந்த கொலையாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொல்லப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் உக்ரைன் போரை தான் எதிர்ப்பதால், புட்டின் தன்னை கொலை செய்து விடுவார் என அஞ்சுவதாக குறிப்பிட்டிருந்தார்.

55 வயதான நெம்ட்சொவ் (Boris Nemtsov) , 1990 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் உடைந்து ரஷ்ய கூட்டமைப்பு உருவான பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பேரிஸ் யெல்சின் அரசாங்கத்தின் முதல் துணைப் பிரதமராக பதவி வகித்தார்.

ரஷ்யாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான Nizhny Novgorod ஆளுநராக பணியாற்றியுள்ள நெம்ட்சொவ், பொருளாதார துறையிலும் புகழ்பெற்றவர்.

பேரிஸ் யெல்சின், புட்டினுக்கு ஆதரவு வழங்கிய நிலையில், அவர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதுடன் கடும் எதிர்க்கட்சி அரசியல்வாதியாக மாறினார்.

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான நெம்ஸ்டவ் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், கொலையாளிகள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை இந்த கொலையை வன்மையாக கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கொலை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை ரஷ்ய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.

SHARE