
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளும் காலம் கடந்து போன கட்சிகள். நாட்டில் நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணி கட்டியெழுப்படும்.
எமது கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு நல்லாட்சியை விரும்பும் சகல கட்சிகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
கூட்டணியின் சின்னம் எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும். தற்போது கூட்டணி குறித்து பலரிடம் பேசி வருகின்றோம்.
ஜனவரி புரட்சிக்கு பங்களிப்பு வழங்கிய சக்திகளின் ஒத்துழைப்பு எமது கூட்டணிக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.
ஜாதிக ஹெல உறுமய என்பது நாட்டின் முக்கியமான பிரச்சினைகளின் போது முன்நின்று செயற்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி சமஷ்டி நிலைப்பாட்டு எதிராக குரல் கொடுத்தது.
ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் முனைப்புகளை மேற்கொண்டது. ஜாதிக ஹெல உறுமய உருவாகிய பின்னர், பிரபாகரனை தோற்கடிக்க தேவையான அரசியல் சூழல் ஏற்பட்டது.
மாவில் ஆறு அணையை திறக்குமாறு எமது பிக்குமார் அழுத்தங்கள் கொடுத்த பின்னர், நடந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கை பிரபாகரனை தோற்கடித்தும் முடிவடைந்தது.
இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் செயற்பாடுகளை பங்களிப்பு வழங்கியது. அதற்கான முதல் துப்பாக்கி வேட்டை நாங்களே தீர்த்தோம். இதேபோல எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனியான கூட்டணியாக போட்டியிடுவோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.