ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவர் அஸ்மா ஜோஹ்ரா, ”முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன.
ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்துகொள்ளவேண்டிய காலம் இது. பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்களைத் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் ஃபரூக்கி பேசுகையில், ”முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள், அவர்களை எளிதில் முட்டாளாக்கிவிடலாம் என்று சிலர் சித்தரிக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல.
அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம் பெண்கள் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு நல்லது எது… கெட்டது எது? என்று அவர்களுக்கு தெரியும். 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்துக்கு ஆதரவாக கையெழுத்துப் போட்டு, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
குறைந்த அளவிலான பெண்களே அவற்றுக்கு எதிராக உள்ளனர். தற்போது வாரியம், வரதட்சணைக் கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களைச் சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 5-ம் தேதி பதிவிட்டு இருந்தார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், முத்தலாக் விஷயத்தில் மீண்டும் விவாதத்தை ஏட்படுத்தி இருப்பதுடன் மோடியின் திட்டத்தையும் அம்பல படுத்தி உள்ளது.