ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?

494

 

ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?

                           

உலக அரசியல் வரலாற்றில் அவ்வப்போது கண்ணுக்கு தெரிந்தே சில அயோக்கியத்தனங்கள் அரங்கேறுவது வழக்கம். அதில், இந்தியாவை பொறுத்தவரையில் நடப்பு நூற்றாண்டில்  அதிக அளவில் அரசியல்  அயோக்கியத்தனங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் சட்டத்திற்கு புறம்பாக செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் சுடப்பட்டு இருப்பர். ஆனால், செம்மரம் வெட்டச் சொல்லிய நபரின் பெயர் கூட வெளியே வராது,  மூன்று மாநில எல்லையில் சந்தன மரங்களை வெட்டியதற்காக, யானை தந்தங்களை விற்பனை செய்ததற்காக காட்டில் இருந்த வீரப்பன் கொடுரமாக கொலை செய்யப்படுவர். ஆனால், சந்தன மரங்களை, யானை தந்தங்களை  வாங்கியவர்கள் நகரத்தில் இருந்தாலும், அவர்கள் மீது சிறு தூசியும் படிந்து இருக்காது. இதற்கு, இந்திய அரசாங்கமும், சட்டங்களும், ஏவல் துறையும் தெரிந்தே உடந்தையாக இருக்கும்.  இதற்கு முத்தாய்ப்பாக விளங்குவது 7  தமிழர்களின் சிறை வாசம்.
ஒரு நாட்டின் பிரதமரை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய என்ன தைரியம் இருக்க வேண்டும் ?, கொலை செய்தவர்களை தூக்கில் அல்லவா போட வேண்டும் ? என்று நாட்டின் நலனையே தனது முதல் குறிக்கோளாக கொண்ட  மனிதர்கள் என்ற மனப்பான்மையில் சிலர் 7 பேர் சிறைவாசம் குறித்து பேசி இருக்கலாம். ஆனால், அவர்களிடமே, ராஜீவ்காந்தி கொலை செய்தவர்கள் யார் என்றால், பேரறிவாளன் உள்பட 7 பேர்தான் என யோசிக்காமல் உடனே  பதில் வரும். இந்த வாசகத்தில், யோசிக்காமல் பதில் வரும் என்று குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில், யோசித்து இருந்தால், அவர்கள் இவ்வாறு கூற மாட்டார்கள்.
“நிதிக்கு விலைபோவது நீதி” என்ற வாசகத்தில் பலர் நம்பிக்கை வைத்திருக்கும் தற்போதைய நிலையில், நீதித்துறையே ஊடகங்கள் சொல்வதை ஆதாரமாக ஏற்காது. ஆனால், நீதிதான் முக்கியம் என மூச்சு முட்ட பேசும் நம்  மனம் அதனை ஏற்கும் என்பதே அடிப்படை உண்மை. அதன்படி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் 7 பேர் தான் என ஊடகங்கள் திரும்ப, திரும்ப சொல்லியதன் விளைவு இன்றளவும் அந்த 7 பேர் அறியாமை கொண்ட  மக்களின் ஆதரவுடன், தொடர்ந்து ஏமாற்றப்பட்டு சிறையில் உள்ளனர். ராஜீவ் கொலை செய்தவர்கள் 7 பேர்தானா ? அவர்கள் தற்போது சிறையில் உள்ள 7 பேர் தானா ? என்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் தேடினால், ஒரு சிறிய  வட்டத்தில், குகைக்குள் இருக்கும் மனிதர்களை போல, வெளி உலகம் தெரியாதவர்கள் என்ற பட்டியலில் உங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
அதனால், நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் ராஜீவ் கொலை ஏன் ? எதற்காக ? யாருக்காக ? எப்படி ? என ஆராய வேண்டும். ஏனெனில், ராஜீவ்காந்தி கொலை பின்னணியில் பல இந்திய அரசியல் வரலாற்றை விட,  உலக அரசியலை தெரிந்துக் கொள்ளலாம். அதனோடு, கால் நூற்றாண்டாக சிறையில் இருப்பவர்களை விடுதலையும் செய்யலாம். இதற்காக, ராஜீவ் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் இரவிச்சந்திரன் எழுத்தில்,  எழுத்தாளர் பா.ஏகலைவன் தொகுப்பில் வெளிவந்த “ராஜீவ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில உண்மைத் தரவுகளை இங்கே காணலாம்…
உலக அளவில் உளவு நிறுவனங்கள் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பல நாடுகளில் வேவு பார்க்கும் வேலைகளையும், நாச வேலைகளையும், சட்ட விரோத பணம் பரிமாற்றத்தையும் செய்து வருகிறது. அதனால், ஸ்ரீ  பெரும்புத்தூரில் ராஜிவ்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படும் நடவடிக்கையில் பத்திரிகையாளர் என்ற போர்வையில் சிவராசன் இருந்ததாக சிபிஐ கூறுகிறது. ஆனால், அதே வேளையில், வெடிகுண்டு நடக்கும் சில நிமிடம்  முன்பாக, ராஜிவ்காந்தியை இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். அதில், அமெரிக்கா உளவு அமைப்புக்கு நெருக்கமான, நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளரும் ஒருவர். மற்றொருவர், இந்திய உளவு  நிறுவனத்தில் அப்போது இயக்குனராக இருந்தவரின் மருமகளான, பெண் பத்திரிகையாளர் நீனா கோபால். இந்த இரு பத்திரிகையாளர்கள் குறித்த எந்த விவரமும் இன்னும் வெளிவரவில்லை. வேவு வேலை பார்த்ததாக  சிவராசன் மீது வரும் சந்தேகம், இவர்கள் மீதும் வராமல் பார்க்கப்பட்டது ஏன் ? என்பது இன்றளவும் அறியப்படாமல் உள்ளது. அத்துடன், ராஜீவ்கொலை குறித்த வீடியோ இன்றுவரை ஒப்படைக்கப்படாமல் இருக்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டு இன்றளவும் இருந்து வருகிறது.
இந்திராகாந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக பதவியேற்று ஓராண்டு கடந்திருக்கும். அப்போது, அமெரிக்க உளவு நிறுவனமாக சி.ஐ.ஏ ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவார் என அறிக்கை அளித்தது. அத்துடன்,  ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு இந்திய அரசியல் எவ்வாறு இருக்கும் என “ராஜீவ்க்கு பிந்தைய இந்தியா” என்ற தலைப்பில் அமெரிக்க உளவு நிறுவனம் 1986ம் ஆண்டு மார்ச் மாதத்திலே அறிக்கை சமர்பித்து  இருந்தது. ஒரு நாட்டின் பிரதமர் கொல்லப்படுவார் என வேறு ஒரு நாடு உறுதியாக அறிக்கை சமர்பிக்கிறது. அதன்படி, 5 ஆண்டுகளுக்கு பிறகு ராஜிவ் கொலை செய்யப்படுகிறார். இந்த ரகசியம் 30 ஆண்டுகளுக்கு பிறகு  வெளியே வந்தது. ஆனால், அதிலும் பல ரகசிய அறிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதனை, இந்திய ஊடகங்கள் இன்றளவும் சந்தேக அடிப்படையில் கூட கேள்வி எழுப்பவில்லை என்றே சொல்லலாம். ஆனால், ராஜீவ்  கொலை வழக்கில் சிக்கியவர்கள் 7 பேர் என மட்டும் தினமும் உரக்க சொல்லும். இதனையே, நடுநிலைவாதிகள் என தன்னைத் தானே நினைக்கும் சிலரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க உளவாளி சுப்பிரமணியசுவாமி (?):

அமெரிக்கா 1986ம் ஆண்டு காலக்கட்டத்தில்  சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க வெகுவாக முயற்சித்தது. ஆனால், அப்போதைய இந்திய பிரதமர்  ராஜீவ்காந்தி அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இருந்தார். அதனுடன், இந்தியா உள்பட தெற்காசிய நாடுகள் அமெரிக்காவிடம் கையேந்த கூடாது, தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்காவின்  உதவியின்றி முன்னேற தனி வங்கி உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டு இருந்தார். அச்சமயத்தில், அமெரிக்கா இந்திய தலைநகரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இந்திய அரசின் நடவடிக்கைகளை  துல்லியமாக அறிய சில ஏஜெண்ட்களை முன்னிறுத்தியது. அதில், பாஜகவின் மூத்த தலைவராக தற்போது இருக்கும் சுப்பிரமணியசுவாமி முக்கியமானவர்.
இச்சமயத்தில், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது என இந்திய உளவுத்துறை சொல்லவில்லை. ஆனால், அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கொண்ட, பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் (PLO)  யாசர் அராபத்,  ராஜீவ் உயிருக்கு ஆபத்து உள்ளதென தனிப்பட்ட முறையிலும், தனது முகவர்களை நேரடியாக சந்திக்க வைத்தும் எச்சரிக்கை விடுத்தார். இதன் மூலம், ராஜீவ்காந்தி தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும்,  அதற்கு உதவியாக இருப்பவர்கள் யார் என்றும் நன்றாகவே அறிந்து இருப்பார். இருந்தாலும், ராஜீவ்காந்தி நேரடியாக எந்த எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுக்காமல் பொறுமை காத்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா தனது அதிகாரத்தை நிலை நிறுத்த மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது போன்று, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இந்தியாவின் அதிகாரத்தை தெற்காசிய அளவில்  நிலைநிறுத்த இலங்கை, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டது. இதனை, அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால், ராஜீவ்காந்தி மீது போபர்ஸ் பீரங்கி ஊழல் வெளியிடச்செய்தது. அதனால், ராஜீவ்காந்தி நல்ல பெயர் வாங்கும் விதமாக, இலங்கையில் தமிழர், சிங்களர் இன பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக கூறி, இந்தியா, இலங்கை  இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அமெரிக்க அரசுக்கு இதன் உள்நோக்கம், ராஜீவ் நல்ல பெயர் வாங்க வேண்டும், இலங்கையை தனது ஆதிக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருந்தது.  இருந்தாலும், இந்திய மக்கள் பலர் இலங்கையில் சிங்களர், தமிழர் இடையிலான இன பிரச்சனைக்கு சமாதானம் உண்டாக்க என பலர் நம்பி இருந்தனர்.  ஆனால், இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழர், சிங்களர்  இடையே சமாதானம் உண்டாக்க அல்ல. இலங்கையில் திரிகோண மலையை கையகப்படுத்த நடத்தப்பட்ட நாடகம் என இலங்கையின் சிங்களரும், தமிழரும் நன்றாக அறிந்திருந்தனர்.  (இலங்கையில் திரிகோண மலையை  கையகப்படுத்த நடத்தப்பட்ட நாடகம் என்பதை 1994ம் ஆண்டு பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஜெயின் கமிஷனில் இந்த உண்மையை அம்பலப்படுத்தினார்).
பின்னர், இந்தியாவில் 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ராஜீவ்காந்தி மீதான போபர்ஸ் ஊழல் பிரச்சனை அதிகரித்து காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. இருந்தாலும், ராஜீவ்காந்தி சந்திரசேகர்,  சுப்பிரமணியன் சுவாமி, டி.என்.சேஷன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரசேகரை தனது கூட்டணியில் பிரதமராக்க முடிவு செய்தார். இதன் மூலம், தான் வெற்றி அடைந்ததாக நினைத்தார். ஆனால், இதுவே,  அவருக்கு ஆபத்தாக அமைந்தது. அதாவது, சந்திரசேகர் அமெரிக்காவின் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார். அதனுடன், அமெரிக்காவின் போர் விமானங்கள் இந்தியாவில் இறங்கி எரிபொருள் நிரப்ப அனுமதி  அளித்தார்.  ஆனால், ராஜீவ்காந்தி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டை சந்திரசேகர் எடுத்தால் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று ராஜீவ்காந்தி கூறினார். இதனால், அமெரிக்கா ராஜீவ்  மீது மேலும் கோபம் கொண்டிருந்தது.
இச்சமயத்தில், பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியை தக்கவைக்க, ராஜீவ்காந்தி அரசால் உருவான பஞ்சாப் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தார். அதற்காக, சந்திரசேகர் தனது நண்பர் மகாந்த் சேவா தாஸ் சிங்  என்பவரை பிரிட்டனுக்கு அனுப்பி, அங்கே பதுங்கி இருந்த பஞ்சாப் சீக்கிய தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் என்பவருடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். அப்போது, ஜக்ஜித் சிங் மகாந்த் சிங்கிடம், ராஜீவ்காந்தி  தயவில் ஆட்சி அமைந்திருக்கும் சந்திரசேகரால் காலிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது, அதனால், ராஜீவ் காந்தியை கொலை செய்தால், சந்திரசேகர் பதவியை தக்கவைக்கலாம், காலிஸ்தான் பிரச்சனையையும் தீரும்  என்றார். மேலும், அமெரிக்க உளவாளியான சந்திராசாமி பணம் உதவி செய்வார் என்றார். (பஞ்சாப் தீவிரவாத இயக்கத்தையும் அமெரிக்கா தொடர்பு வைத்திருப்பதும், பயங்கரவாத அமைப்பை ஊக்குவித்திருப்பது இதிலிருந்து  தெரியவரும்) (நீதிபதி ஜெயின் முன்பு மகாந்த் சேவா தாஸ் இதனை வாக்குமூலம் அளித்தார். பிரதமராக இருந்த சந்திரசேகர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த நிலையில், சந்திரசேகரின் நண்பரும், அரியானா மாநிலத்தின் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா அரசின் போலீசார் ராஜீவ் இருந்த வீட்டினை வேவு பார்த்தனர். இதனால், சந்திரசேகர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  அமெரிக்கா உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தேவையான பணப் பிரச்சனைகளை தீர்க்க BCCI (Bank of credit and commerce International) என்ற வங்கியை கொண்டிருந்தது.  இதில்,  அமெரிக்க உளவாளிகளான சந்திரசாமி, அட்னன் கசோகி, எர்னி மில்லர் மற்றும் கே.பி, சிவராசன் ஆகியோருக்கும் வங்கி கணக்குகள் இருந்துள்ளது. ராஜீவ் கொலைக்கு முன்னும், பின்னும் அதிகப்படியான பணப்  பரிவர்த்தனைகள் இதில் நடந்துள்ளது. குறிப்பாக, சந்திராசாமி கணக்கில் இருந்து சிவராசனுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பின்னர், அமெரிக்க அரசாங்கத்தாலே இந்த வங்கியின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகள் சம்மந்தப்பட்ட சிவராசன் இப்போதுதான் இந்த பிரச்சனையில் வருகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சித் தலைவர் கூட்டம் நடக்கிறது என்றால், அக்கட்சியை சேர்ந்தவர்களே  எளிதில் மேடை ஏற முடியாது. அதுவும், ஒரு பிரதமர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இருக்கும் இடத்தில், விடுதலைப் புலிகளின் உளவு பிரிவில் இருந்த சிவராசன்  மற்றும் தணு என்பவர்கள் ராஜீவ் பாதுகாப்பு வளையத்தினுள் எளிதாக நுழைய முடிந்தது எப்படி ? அதற்கு அனுமதி அளித்தது யார் ?  என்ற கேள்விகளை ஆராயும்போது, ஒரு சில விசயம் புலப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சித் தலைவராக அப்போது இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆகியோர் ஸ்ரீ பெரும்புத்தூரில் ராஜீவ்காந்தி கூட்டம்  நடத்த வேண்டாம் என்றாலும், மரகதம் சந்திரசேகர் என்பவர்  கூட்டம் நடத்த தொடர் முயற்சி செய்தார். முக்கியமாக, டெல்லி மேலிடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ராஜீவ் பயணத்தை முடிவு செய்பவருமான மார்கிரெட் ஆல்வா கூட்டம் நடத்தப்படும் என்றார். இவர், ராஜிவ்  கூட்டத்தில் சிவராசன் கலந்துக் கொள்ள பெங்களூரில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று ரெங்கநாதன் என்பவர் கூறியிருக்கிறார். இதனை எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. அதனுடன், விடுதலை  புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிவராசன், தணு, சுபா ஆகியோர் ராஜீவ் பாதுகாப்பு வளையத்தில் நுழைய காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர் சந்திரசேகர் மகள் லதா பிரியகுமார் ஏன் உதவி செய்துள்ளதை இன்றளவும் உலகம்  அறியாமல் உள்ளது. விடுதலைப் புலிகள் என்றதும் ஒட்டு மொத்த கொலை பார்வையும் விடுதலை புலிகள் மீது விழும்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே இதற்கு உடந்தை என்னும் போது, அதனை ஒரு பொருட்டாக நம்  மனம் ஏற்காதது நம் மனம், மூளை ஊனத்தில் இருப்பதாகவே எண்ண வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் 1993ம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் (நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது) ராஜீவ் கொலையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சதிகளின்  பெரிய கூட்டுச் சதியாகும். அதில், விடுதலைப் புலிகள் ஓர் அம்பு மட்டுமே என்றார். மேலும், ராஜிவ் கொலையில் அமெரிக்க உளவு நிறுவனம் மீது சந்தேகம் இருக்கிறது என்றார்.
விடுதலை புலிகள் ஆதரவாக இருந்தவர்கள் சிவராசன், தணு என்பதாலே அவர்கள் மீது முழு பழியும் போய் சேர்கிறது. ஆனால், ராஜீவ் கொலை செய்த அம்பாக இவர்கள் இருந்தாலும், அந்த அம்பை எய்தது யார் ? என்ற கேள்விக்கு  மட்டும் பதில் தேட நமது மனம் மறுப்பது அறியாமையின் வெளிப்பாடு. ஏனெனில், விடுதலைப் புலிகள்தான் ராஜீவ்காந்தியை கொலை செய்தார்கள் என எளிதாக முடிவு செய்துவிட்டால், மேற்கொண்டு அதனைப் பற்றி ஆராய  வேண்டாம் என்ற சோம்பல் நிறைந்த மன நிலையே இதற்கு காரணம். அதேவேளையில், ராஜீவ் கொலை குறித்து ஜெயின் கமிஷன் கூறியபடி ஆராய்ந்தால், பல்வேறு தலைவர்கள் சிக்கக் கூடுவதோடு, நாட்டின் மீது  அமெரிக்க  ஆதிக்கம் செய்த மனப்பான்மையை வெட்ட வெளிச்சமாகும். அப்படி நடந்தால், இந்தியாவை வழிநடத்தும் தலைவர்கள் என நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் மனநிலையில் பெரிய பூகம்பம் ஏற்படக் கூடும். அதனால், அந்த  நிலை ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து மக்களை குழப்பியும், ஏமாற்றியும் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
சிவராசன் ராஜீவ்-வை கொலை செய்ய உடந்தையாக இருந்தார் என்றால் அவருக்கு உடந்தையாக இருப்பவரை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கு முன்னதாக, சிவராசன் விடுதலைப் புலிகள் சொல்லித்தான் இதனை செய்தாரா ?  என்பதையும் ஆராய வேண்டும். இதில், விடுதலை புலிகள் சொல்லி, சிவராசன், தணு ஆகியோர் ராஜீவ்-வை கொலை செய்யவில்லை என்பது புலப்படும். ஏனெனில், விடுதலைப்புலிகள் ராஜிவை கொலை செய்ய திட்டமிட்டு  இருந்தால், ஆதாரம் சிக்கும் படி புகைப்படம் எடுத்து இருக்க மாட்டார்கள், விடுதலைப் புலிகள் சொந்த பெயரை பயன்படுத்த மாட்டார்கள். அப்படி இருக்கையில், சிவராசன் டைரியில் அவரது சொந்த பெயர் இரவி என்பது  இருந்ததாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. விடுதலை புலிகளின் அடிப்படை விதியில் இது முற்றிலும் விலகியது, ராஜீவ் கொலைக்கு பிறகு ஈழம் செல்ல பல வாய்ப்புகள் இருந்தும் அதனை சிவராசன் மறுத்தார் என்பதையும் கவனத்தில்  கொள்ள வேண்டும்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சம்பந்தம் இல்லாமல், அவரது உடனிருந்தவர்களை கைப்பொருளாக மாற்றி, ராஜீவை கொலை செய்த நபர்கள் அமெரிக்காவின் உளவு பிரிவுக்கு உதவியாக இருந்தவர்கள்,  இந்தியாவை வழி நடத்தும் முக்கிய அரசியல் தலைவர்கள் என்ற உண்மை வெளிப்படையாக இருந்தும், அதனை மக்கள் மனதில் கொண்டு செல்லாதபடி பல பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அதாவது, ராஜீவ் கொலை  செய்த நாளில் யார் கொலை செய்தார்கள் என இந்திய உளவுப் பிரிவு ஆராய்ந்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில், பஞ்சாப் தீவிரவாத அமைப்பின் மீது விசாரனையை தொடங்க கூடிய சூழல் இருந்தது. ஆனால், ராஜீவ் கொலை  செய்தது யார் என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னரே, ராஜீவ்காந்தியை கொலை செய்தது விடுதலை புலிகள் என்ற பிரச்சாரத்தை முதல் முதலில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அன்று இரவேபரப்பினார். இதற்கு  ஆதரவாக, ராஜிவ் கொலையின்போது தணு இருந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதோடு, ராஜீவ் ரத்த வெள்ளத்தில் இருந்த புகைப்படம் பத்திரிகைகளில், வீதிகளில் பரப்பப்பட்டது. இதனால், ராஜீவை கொலை செய்தது  விடுதலை புலிகள் என்ற கண்ணோட்டத்தை விசாரணை இல்லாமலே, மக்களை நம்ப வைத்தார் சுப்பிரமணிய சுவாமி. ஆனால், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், ராஜீவ்  கொலைக்கும், விடுதலை புலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். இருந்தாலும், ராஜீவ் கொலை செய்தது விடுதலை புலிகள்தான் என சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவாக, அப்போதைய காங்கிரஸ் செயல்பட்டது.
பின்னர், ராஜீவ் கொலை குறித்த விசாரணையில் விடுதலை புலிகள் ராஜீவ் கொலை செய்தது என்ற பார்வையை மாற்றி பரவலாக விசாரணை செய்ய வேண்டும், இதில், உள்நாடு, வெளிநாடு சதி உள்ளது, பெரும் புள்ளிகள்,  அரசியல் அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐஜி அமோத்காந்த, டிஐஜி குமார், டிஎஸ்பி ரகோத்தமன் ஆகியோர் வலியுறுத்தினர்.  ஆனால், கார்த்திகேயன், எஸ்பி தியாகராஜன், டிஐஜி ராஜூ  ஆகியோர் விடுதலை புலிகள் தான் என்ற சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை ஆதரித்து எளிதாக வழக்கை முடிக்க, விடுதலை புலிகள்தான் கொலை செய்தது என்ற பார்வையில் விசாரணை மேற்கொண்டனர். இதில், அரசியல்  ஆதிக்கம் கொண்ட சுப்பிரமணிய சுவாமி நினைப்பு படியே, ராஜீவ்காந்தியை கொலை செய்தது விடுதலை புலிகள் தான் என அவர் வரைந்த கோட்டின்படி நடக்கும் விசாரணையே ஏற்கப்பட்டது. மற்றதை தவிர்த்து, அதன்படியே  விசாரணை நடந்தது.
இந்த நேரத்தில், ஜெயின் கமிஷன் ஓர் விசாரணை அறிக்கை வெளியிட்டது. அதில், ராஜிவ் கொலையில் உள்நாடு, வெளிநாடு தொடர்பு கொண்டவர்கள் மீது அதிக சந்தேகம் இருப்பதால் சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசாமி,  ஆயுத விற்பனையாளர் கசோகியை ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றது. ஆனால், அந்த அறிக்கை  இன்றளவும் ஏற்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும், வர்மா, ஜெயின் கமிஷன் ராஜீவ் கொலை  குறித்து இவர்கள் மீது சந்தேகம் என்ற வகையில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் (சந்திராசாமியின் நண்பர்) சில முக்கிய கோப்புகள் கொடுத்தது. ஆனால், அந்த கோப்புகள் காணாமல் போனதாக பிரதமர் அலுவலகம்  தெரிவித்தது. இந்த தகவலும் மக்களிடம் சென்றடையாமல், சுப்பிரமணிய சுவாமியின் பெயர் ராஜீவ் கொலை வழக்கில் சம்மந்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்த ஊடகமும் கேள்வி கேட்காத நிலை இருந்து வருகிறது. ஆனால், ராஜீவ் கொலையில் அடித்து வாக்குமூலம் பெறப்பட்ட நபர்கள் மட்டும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை பார்க்கும்போதுதான் ராஜீவ்  கொலை நடுநிலைவாதிகளுக்கு நியாபகம் வருமே தவிர, சுப்பிரமணிய சுவாமி மீதோ, காங்கிரஸில் இருந்தாலும் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவாக செயல்பட்ட அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்  மீதோ, ராஜீவ் கொலை  குறித்த ஞாபகம் வராதது நம்முடைய அறியாமையை தவிர, வேறொன்றும் இல்லை எனலாம்.
அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசின் அதிகாரம் கொண்ட பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசவையில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கு அமெரிக்க அரசு தனிப்பட்ட  முறையில் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நிலை, இன்றைக்கு வரை மாறவில்லை, எதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு அரசின் உயரிய பதவி அல்லது அரசியல் அதிகாரம் செய்யும் இடத்தில் தொடர்ந்து அவர் நீடிப்பதில்  இருந்தே அறியலாம்.

சோனியா மவுனம் :


ராஜீவ் கொலை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் விடுதலை புலிகள்தான் ராஜீவை கொலை செய்தது என சிபிஐ கண்டறிவதற்கு முன்னரே, சுப்பிரமணிய சுவாமி கூறினார். அதிகாரம் பலம் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி  சொன்னபடியே, விசாரணையும் தொடங்கியது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து, ராஜீவ் கொலை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சுப்பிரமணிய சுவாமி இரண்டு நாள் காணாமல் போனது ஏன், அதன் மர்மம் என்ன என்று திருச்சி  வேலுசாமி கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருச்சி வேலுசாமியின் இந்த கருத்து மிக முக்கியம் வாய்ந்தது. ஏனெனில், ராஜீவ் கொலை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சுப்பிரமணியன்  சுவாமியுடன் இருந்தவர். அதனால், திருச்சி வேலுசாமி ராஜீவ் கொலைச் சம்பவம் நடைபெற்ற சமயத்தில், சுப்பிரமணிய சுவாமி இரண்டு நாள் காணாமல் போன மர்மம் குறித்து ஆராய்ந்து, சில அதிர வைக்கும் உண்மைகளை  கண்டும், கேட்டும் உள்ளார். அதனை, காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாகாந்தியிடம் கூறியுள்ளார். அதனால், சோனியா காந்திக்கு ராஜீவ் கொலை குறித்த மர்ம முடிச்சுகள் விபரம் நன்றாக அறிந்திருக்க கூடும்.  இருந்தாலும், சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
காங்கிரஸ் கட்சியில் இருந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்தாலும், அவர் சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவாகவே செயல்பட்டார். அதனால், நரசிம்மராவின் மூடி மறைப்பு நடவடிக்கையை அதிர்ச்சியோடும், ஒரு வித  அச்சத்தோடும் தான் சோனியா பார்த்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, 1996ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வி அடைந்து நரசிம்மராவ் ஓரங்கட்டப்பட்டார். நரசிம்மராவ் இறந்த பிறகும் அவர் மீதான கோபம் சோனியாவுக்கு  குறையவில்லை எனலாம். ஏனெனில், நரசிம்ம ராவ் இறந்த அன்று சோனியா அவரது இறுதி அஞ்சலிக்கும் செல்லாமல்,  அன்று இரவே, அவர் உடலை டெல்லியில் இருந்து அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். சோனியாவின்  கோபம் அன்று வெளிப்பட்டது.  பின்னர், இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவராக 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்தார். ஆனால், அச்சமயத்திலும், ராஜீவ் கொலை குற்றவாளி யார் என்ற உண்மையை உலகம்  அறிய செய்ய அவர் விரும்பவில்லை. குறிப்பாக, ராஜீவ் கொலையில் பல சந்தேகம் எழுப்பிய, சுப்பிரமணியன் சுவாமி உள்பட பலரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய, நீதிபதி வர்மா, நீதிபதி ஜெயின்  கமிஷனை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, அந்த சந்தேகப்பட்டியலில் குறிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் உயர் பதவிகளை வழங்கினார். இதுதான், ராஜீவ் கொலை குற்றவாளிகளை கண்டறிவதை விட சோனியாவுக்கு  அரசியல் லாபம் முக்கியம் என கருதியதை வெளிப்படுத்தியது எனலாம்.
சோனியாகாந்தி நேர்மையாக நடந்து, ராஜீவ்கொலை குற்றவாளிகளை வெளிப்படுத்த முயன்று இருந்தால், நரசிம்மராவ், சந்திரசேகர், சுப்பிரமணியசுவாமி, சந்திராசாமி, மரகதம் சந்திரசேகர், லதா பிரியகுமார், வாழப்பாடி  இராமமூர்த்தி, மார்கரெட் ஆல்வா, எம்.கே நாராயணன் போன்றவர்கள் மீது சரியான விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், சோனியா அப்படி செய்யாமல், இருக்க காரணம் சுயநல அரசியல் என்றே நம்ப வேண்டி  உள்ளது.
குறிப்பு : ராஜீவ் காந்தி கொலையின் மர்ம முடிச்சுகள் இதுபோல் ஏராளம் அவிழ்க்கப்படாமல் உள்ளது. இதனை, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதிய, எழுத்தாளர் பா.ஏகலைவன்  தொகுத்த “ராஜீவ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்” என்ற புத்தகத்தை படிப்பதன் மூலம் அறியலாம்.
SHARE