டெல்லியில் குடியரசு தின விழாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூயிங் கம் மென்று கொண்டிருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
66-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவியும் கலந்து கொண்டுள்ளனர்.
தேசியைக் கொடியை பிரணாப் முகர்ஜி ஏற்றிவைத்த பிறகு ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் டேங்கர்களும், ஹெலிகாப்டர்கள் ஏனைய போர் இயந்திரங்களின் அணிவகுப்பு நடந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அருகே அமர்ந்திருந்த ஒபாமா சூயிங் கம் மென்று கொண்டிருந்தார்.
அவர் சூயிங் கம்மை கையில் எடுத்துவிட்டு திரும்பவும் வாயில் இட்டுக்கொண்டது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக ட்விட்டர் வலைத்தளத்தில் ஒபாமா சூவிங் கம் மென்றது தொடர்பான ட்வீட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
இது குறித்து எழுத்தாளர் ஷோபா டே தனது ட்விட்டரில், (@DeShobhaa) “சகோதரர் பராக் தனது தாடைக்கு ஓவர்டைம் வேலை கொடுத்துள்ளார். நல்ல வேளை அது குட்காவாக இல்லை. இருந்தாலும் ஒரு மிகப்பெரிய அணிவகுப்பின்போதும் சூயிங் கம் சுவைக்க வேண்டுமா?” என குறிப்பிட்டுள்ளார்.