ராம்குமார் தற்கொலை. புழல் சிறையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

251

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் புழல் சிறையில் நடந்தது என்ன? என்பது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை
சுவாதி கொலை குற்றவாளியான ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொள்ள முடியுமா? அது சாத்தியமா? என்பது போன்ற பல கேள்விகள் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

ராம்குமாரின் பெற்றோரும், வக்கீல் ராம்ராஜும் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். புழல் சிறையின் பாதுகாப்பு பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இந்தநிலையில் ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் புழல் சிறையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ராம்குமாரை அவ்வப்போது சந்தித்து மனரீதியாக கவுன்சிலிங் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோரிடம் விசாரித்த போது, அவர்கள் சொன்ன கருத்துகள் பரபரப்பு தகவல்களாக உள்ளன.

சிறைத்துறை அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் சொன்ன தகவல் வருமாறு:–

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று சந்தேகத்தை எழுப்பியவர்கள் தான், இப்போது ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.

சுவாதி கொலை வழக்கை பொறுத்தமட்டில் ராம்குமார் தான் குற்றவாளி என்பதற்கு போலீசார் தகவல் தொழில்நுட்பரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும் கண்கண்ட சாட்சியங்களின் அடிப்படையிலும் பலதரப்பட்ட ஆதாரங்களை திரட்டி உள்ளனர். ஆனால் அந்த ஆதாரங்களை எல்லாம் இதே நபர்கள் ஏற்க மறுத்தனர்.

ராம்குமாரின் சட்டையில் சுவாதியின் ரத்தக் கறை எப்படி வந்தது? சுவாதியின் செல்போன் ராம்குமாரின் வீட்டுக்கு எப்படி போனது? கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ராம்குமார் உருவம் பல கோணங்களில் பதிவானது எப்படி? இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் இவர்கள் நேரடியாக பதில் சொல்ல மாட்டார்கள்.

கொலை அல்ல
தற்போது புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்த சம்பவத்தையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ராம்குமார் கொலை செய்யப்பட்டார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு ஆகும். சம்பவம் நடந்த நேரம் மாலை 4.45 மணி. கைதிகளுக்கு இரவு உணவு கொடுக்கும் சமயம் அது. ஏராளமான கைதிகள் அப்போது அங்கே கூடி இருந்துள்ளனர்.

அவ்வளவு கைதிகள் இருந்த நேரத்தில் ராம்குமாரை எப்படி கொலை செய்ய முடியும்?. ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகுதி ‘டிஸ்பன்சரி பிளாக்’ என்று அழைக்கப்படும். இது உயர் பாதுகாப்பு பகுதி ஆகும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ராம்குமார் மட்டும் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை. அவருடன் 27 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

ராம்குமார் மன அழுத்தத்தில் இருந்தது உண்மை. அதனால் தான் சம்பவத்தன்று அவர் மதிய உணவு சாப்பிடவில்லை. அவரை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க பேச்சிமுத்து என்ற 2–ம் நிலை காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தண்ணீர் குடிக்க…
மற்ற கைதிகளோடு ராம்குமார் சாப்பிட வந்தபோது காவலர் பேச்சிமுத்துவும் உடன் இருந்து உள்ளார். தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என்று ராம்குமார் சென்றுள்ளார்.

அவர் மின்சார பெட்டியை தனது கையால் உடைத்து, பற்களால் மின்சார வயரை கடித்து விடுவார் என்று காவலர் பேச்சிமுத்து எதிர்பார்க்கவில்லை. அவர் சுமார் 10 அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடன் 4 கைதிகளும் இருந்தனர். ராம்குமார் மின்சார வயரை கடித்து தனக்கு தானே மின்சாரத்தை பாய்ச்சிக்கொண்டதை பார்த்தவுடன் காவலர் பேச்சிமுத்து நிலைகுலைந்துபோனார். அவருடன் இருந்த 4 கைதிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

இருந்தாலும் சுதாரித்துக்கொண்ட பேச்சிமுத்து உடனே ஓடி சென்று போர்வையை எடுத்து வந்து அதை முறுக்கி ராம்குமார் மீது அடித்து இருக்கிறார். அதற்குள் ராம்குமார் தூக்கி வீசப்பட்டு கீழே சாய்ந்து விட்டார்.

இது எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. ராம்குமார் அரசுக்கும் எதிரி அல்ல. போலீசுக்கும் எதிரி அல்ல. சிறை காவலர்களுக்கும் அவர் எதிரி அல்ல. அவரை ஏன் கொலை செய்ய வேண்டும். ஏன் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

உடன் சென்று இருக்க வேண்டும்
ராம்குமார் தண்ணீர் குடிக்க சென்றிருந்த போது சிறை காவலர் பேச்சிமுத்துவும் உடன் சென்றிருக்க வேண்டும். அவர் உடன் செல்லாமல் சற்று தொலைவில் நின்றது தவறு தான். ஏனென்றால் ராம்குமார் மதியம் சாப்பிடாமல் இருந்ததால் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பேச்சிமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ராம்குமார் தலித் என்பதால் வேண்டும் என்றே சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த புழல் சிறையில் சூப்பிரண்டாக பணியாற்றும் அன்பழகன் மதுரைக்காரர். அவரும் தலித் இனத்தை சேர்ந்தவர். இன்னும் ஒரு மாதத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார். மேலும் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை பிளாக்கின் உதவி ஜெயிலராக பணியாற்றும் ராஜேந்திரனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் தான். அவர்களுடைய பாதுகாப்பில் இருந்த ராம்குமாரை எப்படி கொலை செய்ய முடியும்?.

இதுபோன்ற பல தகவல்கள் ராம்குமார் கொலை செய்யப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக சொல்லலாம். மாஜிஸ்திரேட்டு விசாரணையில் உண்மை தெரிய வரும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தூண்டுதல் காரணமா?
ராம்குமாருக்கு அடிக்கடி கவுன்சிலிங் மூலம் மன அழுதத்தை குறைப்பதற்கான சிகிச்சை அளித்து வந்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் கூறியதாவது:–

போலீசார் கைது செய்த போதே, ராம்குமார் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றவர். அதே மனநிலை தான் அவரிடம் தொடர்ந்து காணப்பட்டது. அவர் யாரிடமும் மனம்விட்டு பேசமாட்டார். வாரத்துக்கு ஒரு முறை நான் அவரை சந்தித்து மனதளவில் அவரை தேற்றி இருக்கிறேன்.

என்னிடம் கூட மனம்விட்டு பேச மாட்டார். நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார். அவரை பயமுறுத்தும் விதத்தில் சிலர் பேசி இருக்கலாம். சில கைதிகள் கூட அவரை பயமுறுத்தும் வண்ணம் பேசியதாக தகவல் உண்டு. அதுபோன்ற கைதிகளை ராம்குமாரை சந்திக்க விடாமல் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர்.

ராம்குமாரின் சாவுக்கு கண்டிப்பாக சிலரின் தூண்டுதல் பின்னணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ராம்குமாரை கொல்வதற்கு எந்தவித காரணமும் இல்லை. சிறையில் அதற்கான முகாந்திரமும் இல்லை. மாஜிஸ்திரேட்டு விசாரணையில் கண்டிப்பாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

ramkumar

SHARE