ரியோ ஒலிம்பிக்கில் பெல்ப்ஸுக்கு 4-வது தங்கம் : மொத்தமாக 26 பதக்கங்கள் வென்று அசத்தல்

240

ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 4-வது தங்க பதக்கத்தை கைப்பற்றி அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் அசத்தியுள்ளார். இத்தொடரில் ஏற்கனவே தான் பங்கேற்ற 3 பிரிவுகளிலும் தங்கம் வென்ற பெல்ப்ஸ் தற்போது 200 மீட்டர் தனிநபர் மெடலி பிரிவு நீச்சலில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் களமிறங்கிய பெல்ப்ஸ் 1 நிமிடம் 54.66 விநாடிகளில் இலக்கை எட்டி மற்ற வீரர்களின் தங்க கனவை தகர்த்தெறிந்தார்.

பெல்ப்ஸும் கடும் போட்டி அளித்த ஜப்பான் வீரர் ஹாக்கினோ 1 நிமிடம் 56.61 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கத்தையும், சீனாவின் வாங் சூன் வெங்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். 31 வயதாகும் பெல்ப்ஸ் ஏற்கனவே 100 மற்றும் 200 மீட்டர் பட்டர்பிளை தொடர் நீச்சல் போட்டிகள், 200 மீட்டர் தனிநபர் பட்டர்பிளை ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.

ஒட்டு மொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை 22 தங்கம் உள்பட 26 பதக்கங்களை பெல்ப்ஸ் குவித்துள்ளார். இன்னும் 100 மீட்டர் மெடலி போட்டி அவருக்கு மீதமுள்ளது. அதிலும் பதக்கம் வெல்லும் பட்சத்தில் இந்தியாவின் 116 ஆண்டுகால ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையை அவர் மிஞ்சிவிடுவார். கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி உட்பட 26 பதக்கங்களை வென்றுள்ளது.

SHARE