ரூ.17 கோடியில் தங்கப்புடவை வைரத்தால் ஜொலித்த ரெட்டி குடும்பம்

250

ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரங்க அதிபர் விக்ரம் தேவரெட்டியின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நேற்று திருமணம் கோலகலமாக நடந்தது.

இந்திய நாடே பணப்பிரச்சனையால் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ரூ.650 கோடி செலவில் திருமணம் நடத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளார்.

திருமண செலவுகள்
  • திருமணத்துக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் காலத்து அரண்மனை, திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில், ஹம்பி விட்டாலா கோயில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரியில் உள்ள காளி கிராமம், தாமரைக் குளத்துடன் கூடிய கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டன.
  • கடந்த 12-ம் திகதி இரவு நலங்கு நிகழ்வில் தொடங்கி தினமும் ஒவ்வொரு இரவும் மெஹந்தி, சங்கீதம், நடனம் என விதவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் மணமக்களின் குடும்பத்தினரும், பாஜகவினரும் அதிகளவில் பங்கேற்றனர்.
  • முகூர்த்த தினமான நேற்று காலை ஜனார்த்தன ரெட்டி தனது மகளை சாரட் வண்டியில் அமர வைத்து திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தார்.
  • வைரம் மற்றும் தங்கத்தால் ஜரிகை செய்யப்பட்ட சேலை அணிந்திருந்த பிராமணிக்கு முழுவதும் வைரத்தால் ஆன நகைகளை அணிவித்து இருந்தனர். இதேபோல மணமகன் ராஜீவ் ரெட்டி உட்பட இரு குடும்பத்தாரும் முழுவதும் வைரத்தால் ஆன நகைகளே அணிந்திருந்தன.
  • மகள் திருமணத்தின் காரணமாக ஒட்டுமொத்த பெல்லாரி ரெட்டி சகோதர்கள் குடும்பமே வைரத்தால் மின்னியது. குறிப்பாக பெண்கள் அனைவரும் ஒட்டியானம், காப்பு உட்பட வகைவகையான வைர நகைகளை அணிந்திருந்தனர்.
  • அவர் அணிந்த முகூர்த்த புடவையின் விலை மட்டும் ரூ.17 கோடி. தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த புடவையில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
  • கடந்த 5 நாட்கள் இரவில் நடைபெற்ற பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் செலவு மட்டும் ரூ.50 லட்சம். இதில் திருமண தினமான நேற்று மட்டும் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
  • வெற்றிலை பாக்கு மடித்து தருவதற்காக 500 மாடல்களும், 500 இளம்பெண்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். பாக்குக்கு பெயர் பெற்ற பெல்லாரியில் உள்ள குல்சார் பான் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்டு வெற்றிலை பாக்கு வகைகளை உருவாக்கினர்.
  • திருமணத்தின் போது விருந்தினர்களை வரவேற்கவும், சிவப்பு கம்பளத்தின் மீது நடக்கும் மணமக்களின் மீது காஷ்மீர் ரோஜா மற்றும் ஆம்பூர் மல்லி பூக்களை தூவுவதற்கு மாடல்கள் வரவழைக்கப்பட்டனர்.
  • இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து தலா 500 ஆண் மற்றும் பெண் மாடல்கள் வந்திருந்தனர். இந்த மாடல்களுக்கு வெள்ளை நிற பட்டு வேட்டு சட்டை, வெள்ளை நிற பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகைகள் சீருடையாக வழங்கப்பட்டது.
  • இந்த திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
SHARE