மேற்கு வங்க மாநிலத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பூடான் நாடு வழியாக அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது.
பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை மருந்துகள் தயாரிக்க சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால் பாம்பு விஷத்துக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் நல்ல பாம்பு விஷத்தை கடத்தி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிலிகுரியில் ஹொட்டல் ஒன்றில் நல்ல பாம்பு விஷத்துடன் நான்கு பேர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் வியாபாரிகள் போல் நாடகமாடி அவர்களுடன் பேரம் பேசினர்.
அப்போது அவர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ‘பிரான்ஸ் நாட்டில் இருந்து, வங்கதேசம் வழியாக, பாம்பு விஷம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஷம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபர்கள் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.