சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுண்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடைகளை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பிலான வழக்கு நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கல்கிஸ்ஸ பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தோண்டி எடுக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீளவும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இந்தப் பிரேதப் பரிசோதனைக்காக இறுதியாக லசந்த அணிந்திருந்த ஆடைகளை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ நீதிமன்ற வழக்குப் பொருட்கள் களஞ்சியத்திற்குப் பொறுப்பான அதிகாரிக்கு நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பொலிஸ் அத்தியட்சகர் திசேரா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆடைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த வழக்கு எதிர்வரும் 27ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை இந்தக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் பிரேம் ஆனந்த உதலாகமவை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.