லசந்த கொலை தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியிடம் விசாரணை

235

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்டவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலம் ஒன்றை பெற சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

lasanthanewsfirst

சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமான சாட்சியங்களை மறைத்தமை சம்பந்தமாக இவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகத லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது சாட்சியங்களை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கந்தேகெதர பியவங்சவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் கடந்த வாரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

எவ்வாறாயின் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது தவறான பாதையில் செல்வதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

லசந்த கொலை தொடர்பில் அப்போது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

SHARE