லண்டன் பள்ளியில் இருந்து தப்பி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த மாணவி தாக்குதலில் பலி?

254

பிரித்தானியா தலைநகரான லண்டன் பள்ளியில் இருந்து கடந்தாண்டு தப்பி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த மாணவி தற்போது தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் கிரீன் அகாடமிக் பள்ளியில் கதீஷா சுல்தானா என்ற 16 வயது மாணவி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஓன்லைன் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்ட அவர் ஷமீனா பேகம் மற்றும் அமீரா அபேஸ் ஆகிய இரு பள்ளி தோழிகளுடன் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவை விட்டு வெளியேறினார்.

பின்னர், இஸ்தான்பூல் வழியாக சென்ற அவர்கள் மூவரும் சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தனர்.

மேலும், சுல்தானா அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒரு ஜிகாதியை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், சில மாதங்களில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் சுல்தானின் கணவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள சுல்தானாவின் பெற்றோர் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘கடந்த ஒரு ஆண்டாக சுல்தானுடன் கைப்பேசி வழியாக தொடர்பில் இருந்து வந்தோம். ஆனால், கடந்த 3 மாதங்களாக தங்களது மகளை தொடர்புக்கொள்ள முடியவில்லை.

இது குறித்து விசாரணையில் இறங்கியபோது, கடந்த மே மாதம் சிரியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது சுல்தான் வீட்டின் மீது குண்டு மழை பொழிந்து அழித்து விட்டதாகவும், இந்த தாக்குதலில் சுல்தான் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கணவர் இறந்த பிறகு பிரித்தானியா திரும்பிவிட சுல்தான் விரும்பியதாகவும், தாய்நாட்டை விட்டு வெளியேறி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது தவறான முடிவு என அவர் பின்னர் வருந்தியுள்ளார்.

இதனை அவரது தங்கையுடன் தொலைப்பேசியில் பேசியபோது கண்ணீருடன் தெரிவித்தாக பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

SHARE