லிங்குசாமி-விஷால் கூட்டணியில் வெற்றிப் படமாக அமைந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு, பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

239

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து லிங்குசாமி-விஷால் கூட்டணியில் வெற்றிப் படமாக அமைந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று (செப்டம்பர் 20) சென்னையில் தொடங்கியது.

2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. லிங்குசாமியின் சினிமா கேரியரில் முக்கிய படமாக இருந்தது. கடைசியாக லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் திரைப்படமும், அவரது தயாரிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படமும் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம் அளித்தது. இதன் காரணமாக வெற்றிப் படமாக அமைந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் கதையும் முதல் பாகத்தை போன்று மதுரை நகரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், சென்னை பின்னி மில்லில் ரூ.6 கோடி செலவில் மதுரை நகரம் செட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். வரலக்ஷ்மி நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ள இப்படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

இயக்கத்திலும் தயாரிப்பிலும் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் லிங்குசாமி இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

SHARE