லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை சந்தியிலிருந்து டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மட்டுக்கலை தோட்டத்திற்கு அருகாமையில் 16.12.2015 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான குறித்த பஸ் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி மட்டுக்கலை சந்தியிலிருந்து டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதி மிக நீண்ட காலமாக சேதமாகி காணப்பட்டதன் காரணமாக இதனை சீர்திருத்த 16.12.2015 அன்று காலை 8 மணியளவில் குறித்த ஊழியர்கள் வீதி சீர்திருத்ததுக்கென சிரமதான பணியை மேற்கொண்டு விட்டு மீண்டும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் குறித்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் 59 வயது மதிக்கதக்க குமாரி கிரிபத்கொடை எனும் பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.இதுவேளை இவ்விபத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் பலத்த அடிகாயங்களுக்குட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 40 பேரும் லிந்துலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளுக்கு வாகனங்கள் ஊடாக கொண்டு செல்லப்பட்டனர்.இதில் மூவரின் நிலைமை மேலும் கவலைக்கிடாக இருப்பதாகவும் இதில் ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லிந்துலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட 33 பேருக்கு உரிய வைத்திய சிகிச்சையை மேற்கொள்ள முடியாத பட்சத்தில் 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.