வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இடி, மின்னல் மற்றும் புயலுடன் கோடைமழை பெய்வதுண்டு. அவ்வகையில், இங்குள்ள 14 மாவட்டங்களில் நேற்று இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தலைநகர் டாக்காவில் கால்பந்தாட்ட மைதானத்தின்மீது மின்னல் தாக்கியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இதேபோல், நாட்டின் வடமேற்கு மாவட்டமான பாப்னாவில் எட்டுபேரும், சிராஜ்கன்ச், ராஜ்ஷாயி மாவட்டங்களில் தலா ஐந்துபேரும், கிஷோர்கஞ், பிரமன்பரியா மாவட்டங்களில் தலா நான்குபேரும் பலியாகினர். பிறமாவட்டங்களையும் சேர்த்து மின்னல் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இடி, மின்னல் மற்றும் புயலுடன் கோடைமழைக்கு ஆண்டுதோறும் சுமார் 300 பேர் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது