இன்று தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிலர் பிரிவினையை ஏற்படுத்த பார்கிறார்கள். அண்ணன் சம்பந்தனும் சகோதரர் ஹக்கீமும் மலையகத் தலைவர்களும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படாது பார்க்கவேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சருக்கான வரவேற்று விழாவின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்- கட்சியில் இருந்து விலகி, பதவியில் இருந்து விலகி வந்தால் அது பற்றி பரிசீலிப்போம். இன்னொரு கட்சியில் இருந்து விட்டு எமது கட்சியில் வந்து இணைந்தால் நாம் அவர்களை சேர்ப்பதில்லை. அவர் எம்.பியாக இருந்தாலும் சரி, மாகாணசபை உறுப்பினராக இருந்தாலும் சரி, தவிசாளராக இருந்தாலும் சரி நாம் எவரையும் இணைக்க மாட்டோம். குறிப்பாக அதாவுல்லா கட்சியில் இருந்த ஒருவர் என்னை 7 முறை சந்தித்தார் நான் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் சகோதரர் ஹக்கீம் அவரை இணைத்துவிட்டார். எமது கட்சியில் இருந்து சென்ற ஒருவரை இணைத்துள்ளார்.
அப்படியான வங்குரோத்து அரசியல் செய்யும் தேவை எனது கட்சிக்கு இல்லை. அடுத்த தேர்தலில் – இந்த வன்னி தேர்தலில் – எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை பெறும். இன்று சிலர் எம்மை வீழ்த்தலாம் என கனவு காண்கிறார்கள். சில ஊடகங்களுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள். ஆனால் அது நடக்காது. அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வன்னி, புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, குருணாகல் என அனைத்து பகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. நாங்கள் 10 ஆசனங்களைப் பெற்று அடுத்த நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுத்து, சிறுபான்மை மக்களின் உரிமைக் குரலாக வருகின்ற அரசோடு பேரம் பேசுவோம்.
தமிழ், முஸ்லிம், மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் என்ற 30 வீத சிறுபான்மை சமூகங்கள் ஒன்று சேர்த்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்களித்து மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் அந்த வெற்றி பெற்று ஒரு மாதம் கடந்து விடவில்லை. சிலர் இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அண்ணன் சம்மந்தனுக்கு சொல்கிறேன். சகோதரர் ஹக்கீமுக்கும் சொல்கின்றேன். மலையகத் தலைவர்களுக்கும் சொல்கின்றேன். நீங்கள் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். கடந்த முப்பதாண்டு போர் பிரிவினையை ஏற்படுத்தி சென்றுள்ளது. நாம் முஸ்லிம், நாம் தமிழர் என்று எதனையும் சாதித்துவிடமுடியாது. நாம் எங்களுக்குள் உள்ள சின்னச் சின்ன பிரச்சினைகளை நாமே பேசி தீர்க்க வேண்டும். இனங்களுக்கிடையில் நல்லுறவை பேண வேண்டும்.
இதன் மூலபே இந்த அரசாங்கத்தோடு பேரம் பேசி சிறுபான்மை மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும். – எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சமுர்த்தி, வீடமைப்பு பிரதி அமைச்சர் அமீர்அலி, இலங்கை தர நிர்ணய கட்டுப்பாட்டு சபை தலைவர் கலாநிதி அனிஸ், வடமாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.