வசீம் தாஜூடீன் கையடக்கத் தொலைபேசி விபரங்கள் மீட்கப்பட்டுள்ளன

313

ஹெவ்லொக்ஸ் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய அணியின் முன்னாள் ரகர் வீரருமான வசீம் தாஜூடீனின் கையடக்கத் தொலைபேசி விபரங்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் தாஜூடின் கொலை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்கத்கது. நேற்றைய தினம் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டது.
தாஜூடீனின் கையடக்கத்தொலைபேசியை மீளவும் இயங்க வைக்க முடியாது என்ற போதிலும் அதில் சேமிக்கப்பட்ட தரவுகளை மீட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக கணனிப் பிரிவு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சேமிக்கப்பட்ட குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
கையடக்கத் தொலைபேசியில் மீட்கப்பட்ட தகவல்கள் சீ.டி. ஒன்றில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டதனால், புதிதாக மீளவும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையொன்று நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வாகனம் விபத்துக்குள்ளாகி எரியவில்லை என ஏற்கனவே மோட்டார் போக்குவரத்து திணைக்கள மற்றும் டொயோடா நிறுவன தொழில்நுட்ப ஆய்வாளர்கள் அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளின் அனைத்து சாட்சியங்களும் வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை, படுகொலை செய்யப்பட்டார் என்பதனையே நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட சிலர் இந்தக் கொலையுடன் தொடர்பு பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE