வடகிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவு பாலம் ஏற்படுத்தப்படுகின்றது – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

311

வடகிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவு பாலம் ஏற்படுத்தப்படுகின்றது. அதற்கான ஆரம்பகட்டமாக இன்று அமரர்.சந்திரசேகரனின் 6வது சிரார்த்த தினம் திகழ வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், அட்டன் நகர சபையின் முன்னால் தலைவர் நந்தகுமார் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றுகையில் மறைந்த அமரர்.சந்திரசேகரன் பல போராட்டங்களுக்கு மத்தியில் தமது அரசியலை முன்னெடுத்தவர். அன்று வடக்கில் நடைபெற்ற பொங்குதமிழ் விழாவில் அரசாங்கம் எதிர்த்த பொழுதும் துணிச்சலுடன் அதில் கலந்து கொண்டு தனது துணிவை எடுத்துக் காட்டினார்.

இன்று மலையகத்தில் போராட்ட அரசியல் படிப்படியாக மறைந்து வருகின்றது. அதனை மீண்டும் தட்டியெழுப்ப மலையக மக்கள் முன்னணியும் அதன் உறுப்பினர்களும் மீண்டும் தயாராக வேண்டும்.

ஆயுதம் ஏந்திய போராட்டமாக இல்லாமல் அகிம்சை போராட்டமாக அதனை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அணைவரும் தமிழர்களே. எனவே நாம் அணைவரும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

கடந்த வாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், மூஸ்லிம்  காங்கிரசும் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்கள். எதிர்காலத்தில் அந்த பேச்சுவார்த்தையில் மலையக மக்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் இந்த தருணத்தில் முன்வைக்க விரும்புகின்றேன்.

கடந்த பல வருடங்களாக வடக்கிற்கும் மலையகத்திற்கும் நல்ல ஒரு உறவு பாலம் இருந்து வந்தது. இடையில் அதில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அநடத சரிவை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை மலையக மக்கள் முன்னணி இன்று முதல் ஆரம்பிக்கின்றது. அமரர். சந்திரசேகரனின் கனவை நனவாக்க நான் முழுமையாக என்னை அர்ப்பணித்து செயல்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

SHARE