வடக்கின் இனப்படுகொலைத் தீர்மானம் மற்றும் இராணுவக் குறைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை,
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பின்னரும் முடிவுக்கு வராமல் தொடர்கின்றது. இந்த முறுகல் உச்சநிலையை அடைந்துள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம் மேலும் உறுதிசெய்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்கள் வடக்கிற்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழில் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ள நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திப்பதைப் புறக்கணித்துள்ளார்.
பிரதமரின் வடக்கு விஜயம் குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள நிகழ்ச்சி நிரலில் வடக்கு முதல்வருடனான சந்திப்பு குறிப்பிடப்படவில்லை. வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், மகளிர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், பாடசாலை அதிபர்கள் ஆகியோரைச் சந்திக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பை புறக்கணித்துள்ளார். பிரதமரின் மூன்று நாட்கள் வடக்கு விஜயத்தில் பல்வேறு தரப்பினருடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விக்னேஸ்வரனுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சந்திப்பு நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்படவில்லை. அண்மையில் (06.03.2014) இந்தியாவின் தமிழ்த் தொலைக்காட்சியொன்றின் நேர்காணலில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது வடக்கு விஜயத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்க மாட்டார் என்றும், வடக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பிக்களுடன் பேச்சு நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அந்த நேர்காணலில் முதல்வர் விக்னேஸ்வரனை விமர்சனமும் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் காணி கையளிக்கும் நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தனர். இந்த விஜயத்தின்போது வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் பேசியபோதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசவில்லை. அதுபோல முதல்வர் விக்கியும் பிரதமருடன் பேசவில்லை. பிரதமர் – முதல்வர் மோதல் இவ்வாறு உக்கிரமடைந்துள்ள நிலையிலேயே, மீண்டும் வருகின்றார் பிரதமர் ரணில். 27, 28, 29 ஆகிய மூன்று தினங்கள் பிரதமர் ரணிலின் வடக்கு விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு:- 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். நாக விகாரையில் சமய வழிபாடுகள், காலை 10 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம், முற்பகல் 11 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும். இதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் முற்பகல் 11.15 மணிக்கு வீட்டுக்குத் தலைமை தாங்கும் பெண்களுடனான சந்திப்பு, முற்பகல் 11.30 மணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் நலன்புரி நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல், நண்பகல் 12 மணிக்கு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், நண்பகல் 12.30 மணிக்கு மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறும். இதையடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி விஜயம், மாலை 5 மணிக்கு சோமசுந்தர பரமச்சாரிய ஆதீன பிரதானியை சந்தித்தல், மாலை 5.30 மணிக்கு நல்லூர் கோவிலில் சமய வழிபாடு, மாலை 6.30 மணிக்கு யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகத்துடனான சந்திப்பு, இரவு 7 மணிக்கு தென்னிந்திய திருச்சபை யாழ். அத்தியட்சாதீன ஆயர் டானியல் தியாகராஜாவுடனான சந்திப்பு, இரவு 7.45 மணிக்கு ஜும்மா பள்ளிவாசலில் சமய வழிபாட்டுடன் 27ஆம் திகதி நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. இதையடுத்து, 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட தேசிய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பு, காலை 9.30 மணிக்கு சிவில் பிரதிநிதிகள் சந்திப்பு, காலை 10.30 மணிக்கு ஊர்காவற்றுறை விஜயம், நண்பகல் 12 மணிக்கு நாகவிகாரையில் சமய வழிபாடு, பிற்பகல் ஒரு மணிக்கு பலாலி படைத் தலைமையகத்தில் மதிய உணவு, பிற்பகல் 2.30 மணிக்கு பலாலி விமானப்படைத் தலைமையக விஜயம், பிற்பகல் 3.30 மணிக்கு காங்கேசன்துறை கடற்படைத் தலைமையக விஜயம், மாலை 5 மணிக்கு பலாலி படைத் தலைமையகத்தில் இராணுவ, விமான, கடற்படை, பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பு என்பன இடம்பெறவுள்ளன. இதையடுத்து, 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சந்திப்பு, காலை 10 மணிக்கு வீட்டுத் தலைமைதாங்கும் பெண்களுடனான சந்திப்பு, காலை 10.15 மணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல், காலை 10.45 மணிக்கு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், முற்பகல் 11.15 மணிக்கு பொதுமக்கள் சந்திப்பு, பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவில் வீட்டுக்குத் தலைமைதாங்கும் பெண்களுடனான சந்திப்பு, பிற்பகல் 2.30 மணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல், பிற்பகல் 3 மணிக்கு மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் முதலான நிகழ்வுகளுடன் பிரதமரின் வடக்கு விஜயம் முடிவுக்கு வருகின்றது என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.