வடக்கின் சீரழிவுக்கு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே காரணம்

293

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வீதி விதிமுறைகளினை மீறியதாலேயே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

jhu

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விஷேட விசாரணைகள் நடைபெற்றதாகவும், இதனடிப்படையில் பொலிஸார் மீது குற்றமில்லை எனவும் கூறினார்.

நாட்டின் நீதியானது அனைவருக்கும் சமமானது. வீதி சமிக்ஞைகளை மீறியதால் பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு கோரியும் நிறுத்தாமல் சென்றதனாலேயே துப்பாக்கி சூட்டினை பிரயோகித்துள்ளனர். இவ்வாறு செய்யாவிட்டால் நாட்டில் நீதியை நிலை நிறுத்த முடியாது.

அனால் பொலிஸார் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக தெரிவிக்காமல் இருந்தது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற பல சம்பவங்களின் போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருக்கின்றனர். பாதால குழுக்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட பலர் இவ்வாறே பொலிஸாரால் பிடிபட்டிருக்கின்றனர்.

மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணத்திற்கு இடைப்பட்ட கடற் பகுதிகளில் அதிகளவான கேரளகஞ்சா நாட்டிற்கு கொண்டுவரப்படுவதாக கடந்த காலத்தில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 10 வீதமான கஞ்சா பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலும் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துள்ளது.

இது போன்று சிலாபம் பகுதியில் கேரளகஞ்சா கடத்தப்படுவதை தடுக்க முற்பட்ட போது கடற்படையினர் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் கிறிஸ்தவ தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளார். அவருக்கு சார்பானவர்களே கடற்படையினரை தாக்கியுள்ளனர்.

வட மாகாணத்தில் அதிகரித்து வரும் இவ்வாறான பல குற்றச் செயல்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே அதிகம் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு அண்மை காலங்களில் இந்தியாவில் இருந்து அதிகளவிலான போதைப்பொருட்களும், பல்வேறு திருட்டுப் பொருட்களும் கடத்தப்படுகின்றது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் ஆயுதங்களும் கொள்வனவு செய்யப்படக்கூடும்.

தற்போதைய நிலையில் பௌத்த மதம் மதிக்கப்பட்டு வந்தாலும் விகாரைகள் அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் கோயில்கள் இருக்கும் இடங்களில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிப்பதில்லை. குறிப்பாக நாகதீப, கோகிலாய், வாகநேரியில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.

தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு இடமளிப்பதில்லை. அத்தோடு பௌத்த குருமார்களை அச்சுறுத்தியும் வருகின்றனர்.

விகாரைகள் அமைப்பது தொடர்பாக வடமாகாண சபையில் சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது சமயம் சார்ந்த உரிமைகளை தடுக்கக் கூடிய செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE