வடக்கில் உள்ள வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு அங்கமாக புலம் பெயர் நாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி “முதலீடுகளும், தொழில் வாய்ப்புக்களும்” என்ற கருப் பொருளில் செயலமர்வு ஒன்று நடாத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் ஆலுவலகத்தில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தினை பொறுத்தவரையில் அதிலும் யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் வேலையில்லாத பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக இங்குள்ள இளைஞர்கள், யுவதிகள் வேலையில்லாமல் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள்.
எனவேதான் இங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் முதலீட்டு சம்மேளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இந்த சம்மேளனம் அமைக்கப்பட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் நாடுகளில் இருந்து இங்கு வருகின்றவர்கள் யாழ்ப்பாணத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு விரும்புகின்றார்கள். அனால் அவர்கள் இங்கு முதலீடுகளை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது குறைவாக உள்ளது.
இதனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள குறித்த முதலீட்டு சம்மேளனத்துடன் இவ்வாறு முதலீடுகளை செய்பவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அந்த சம்மேளனத்தினால் சகல உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
இந்த புதிய முயற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதலீட்டு சம்மேளனத்தின் சேவைகள் தொடர்பாக செயலமர்வு ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வின் போது மத்திய வங்கி ஆளுநர் முதலீடுகளுக்கான தேசிய மட்ட சவால்கள் என்ற தொனிப்பொருளிலும், யாழ்.பல்கலைக்கழக வணிக பீடத்தின் பீடாதிபதி சிறுதொழில் முதலீடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை வழங்க உள்ளனர்.
மேலும் தேசிய முதலீட்டு சபையின் உயர் அதிகாரிகளும் அந்த செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது நல்லூர் ஆலய திருவாழா நடைபெற்று வருவதால் அதிகமாக புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிமாவட்டத்தினர் இங்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் செயலமர்வு மேற்கொள்ளப்படுவது நன்மை கிடைக்கும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.