வடக்கில் இருந்து படையினரை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
காவிந்த ஜெயவர்த்தன, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராகவும் செயற்படுகிறார்.
இந்த நிலையில், தேசிய அரசாங்கம், முழுமையாக கடந்தகால காயங்களை ஆற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து எந்த அதிகாரி வந்தாலும் வராவிட்டாலும் மக்களை அபிலாசைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே, வடக்குகிழக்கு மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகவும் காவிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களை பொறுத்தவரை அவர்கள் கடந்த 30 வருடங்களால் தென்னிலங்கையில் இருக்கும் இராணுவத்தினரையே பகலும் இரவும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே, சமாதானம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அவர்களும் சுதந்திரமாக செயற்பட வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று காவிந்த குறிப்பிட்டுள்ளார்.