வடக்கில் காணாமற் போனவர்களின் உறவினர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

379
வடக்கில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதுடன், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெறவுள்ளது என வடபகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள், பெற்றோர், பாதுகாவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் எச்.எம். ஜீ.எஸ். பளிஹக்கார ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறு குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பதிவு நடவடிக்கையில் 500ற்கு மேற்பட்டோர் தமது உறவினர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

வடக்கில் காணமற் போனவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்ததே என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பதிவுகளையும் விசாரணைகளையும் எதிர்கொண்டு காணாமற் போனவர்களின் உறவினர்கள் சலித்துப் போய்விட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமல்லாது வறுமைக்கோட்டின் காரணமாக காணாமற் போனவர்களைத் தேடும் நடவடிக்கையில் உறவினர்கள் பின்வாங்குவதாகவும்,

இதனால் அத்தகைய குடும்பங்களைத் தெரிவுசெய்து வட மாகாணசபை உதவ முன் வரவேண்டுமெனவும், காணாமற் போனவர்களை தேடும் உறவுகளுக்கு வடமாகாணசபை பக்க பலமாக இருக்கவேண்டுமெனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை காணாமற் போனவர்களின் உறவினர்களின் கண்ணீரில் அரசியல் செய்வதை விடுத்து உண்மையாக போராடவேண்டுமெனவும் அரசியல் பழிவாங்கல்களுக்காக காணாமற்போனவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் ஆறாம் திகதி கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்

கிளிநொச்சியில் எதிர்வரும் ஆறாம் திகதி அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தை முன்னெடுக்க காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவத்தாலும் ஓட்டுக்குழுக்களாலும் இதுவரை காலமும் மற்றும் குறிப்பாக முள்ளிவாய்க்கால் பெரும்போரின் போதும் அதன் பின்பும் காணமாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளை மீட்டுத்தரக்கோரி தொடர்ந்து இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் வேண்டப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகளும் எதிர்வரும் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியில் இருந்து கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதபோராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள், கல்வி சமுகத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஊடவியலாளர்கள், காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் உறவுகள், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அனைவரையும் ஆதரவு தந்து கலந்துகொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட காணாமல் போகச் செய்ய்பட்ட உறவுகள் சிறைக்கைதிகளின் உறவுகள் போன்றவற்றிற்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

SHARE