வடக்கில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் வடக்கில் பாதாள உலகக்குழு செயற்பாடுகளும் ஆயுத குழுக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துச் செல்வதாகவும் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய பின் விளைவுகள் ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹாவா குருப் என்ற குழுவின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாள்கள் கத்திகள் போன்றவற்றைக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று தாக்குதல் நடத்துவதனால் யாழ்ப்பாணம் முழுவதிலும் பீதி நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹாவா குருப் யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தது எனவும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணத்திற்கு பழி தீர்க்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் துண்டுப் பிரசூரங்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
எனினும் இந்த துண்டுப் பிரசூரங்களை ஹாவா குழு விநியோகம் செய்யவில்லை எனவும் யாழ்ப்பாண மக்களை பீதியில் ஆழ்த்தும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சிலர் இதனைச் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பில் எழுந்துள்ள பதற்ற நிலைமை தனிந்ததன் பின்னர் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.