யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 85 பேர் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுவதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைசச்ர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 4 ஆயிரத்து 163 பேர் பெறுகின்ற போதிலும், இந்நிலைமைக்கு ஆளாகியுள்ள 11 ஆயிரத்து 625 பேர் எவ்விதக் கொடுப்பனவையும் இதுவரை பெறவில்லை என்ற தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைக் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏனைய மாகாணங்களில் மாகாண சபைகள் ஊடாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் வடமாகாண சபை இதை செய்வதில்லை என்று குற்றம் சாட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் அவர்களால் செய்யக்கூடியதாக இருக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
இதற்கமைய அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், மேலும் 39 ஆயிரத்து 758 பேர் கொடுப்பனவு பெறுவோர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.