வடக்கில் 40,000 வீடுகள் விரைவில் அமைப்போம்

432

வடக்கு மாகாணத்தில் விரைவில் 40 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

கூட்டு அரசின் மூன்றாண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வீடமைப்பு மற் றும் கட்டடத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவால் ஆரம்பித்து வைக் கப்பட்ட வீடமைப்புத் திட்டம் மொனரா கலையில் நேற்று மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வீடமைப்புத் துறைக்கான முதலீடுகளை நாம் அதிகரித்துள்ளோம். 2014ஆம் ஆண்டு வீடமைப்புக்கு 7 ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவே முதலீடு செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டு 19 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. வீடமைப்பு மற்றும் பொது வசதிகளுக்கான முதலீடுகளை இரு மடங்காக அதிகரித்துள்ளோம்.

மத்திய தரத்தில் உள்ளவர்களுக்கும் வீடுகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவின் நிதிஉதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்கான மகாத்தமா காந்திபுர வீட்டு திட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. வடக்கில் 40 ஆயிரம் வீட்டுத் திட்டமும் அமைப்பதற்குத் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் – என்றார்.

வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாண சபை, வடக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

அரச தலைவரின் கீழ் இயங்கிய தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் 50 ஆயிரம் கல் வீடுகள் அமைப்பதற்கு, கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. அந்த வீட்டுத் திட்டமும் தற்போது சரிபாதியாகக் குறைக்கப்பட்டு 25 ஆயிரம் கல் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால், 40 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த தொடருந்து நிறுவனம் அதனை முன்னெடுக்கும் யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய நிறுவனமும் திட்டமுன்மொழிவைச் சமர்பித்துள்ளது.

வடக்கில் இந்தியாவா, சீனாவா வீடுகளை அமைக்கும் பணிகளை முன்னெடுப்பது என்பது இன்னமும் இறுதியாகாத நிலையிலேயே தலைமை அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

SHARE