காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகளின் வேண்டுகோள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தவர்களான நாங்கள் எமது உறவுகளை தேடியும் நீதி கேட்டும் நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகின்றோம்.
இலங்கை அரசாங்கம் இது பற்றி விசாரணை செய்ய பல ஆணைக்குழுக்களை உருவாக்கி இருந்தது இருந்தும் எமது தேடுதலுக்கு இது வரை எந்தப்பதிலும் இல்லை.
2013ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான ஒரு ஆணைக்குழுவை திரு.மக்ஸவெல் பரணகம அவர்கள் தலைமையில் உருவாக்கி இருந்தார்.
thninappuyalnewsவடக்குகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Posted by Thinappuyalnews on Wednesday, 9 December 2015
வேறுவழி இன்றியும் எங்கள் உறவுகளை கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலும் இக்குழுவின் முன் நாங்கள் சாட்சியமளித்தோம் 2015ம் ஆண்டு முடிவடைகின்ற நிலையில் இந்த ஆணைக்குழு உண்மையை தேடி நீதி வழங்க ஒரு அங்குலமாவது முன் நகர்ந்திருப்பதாக தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள், சிவில் அமைப்புக்கள், நலன் விரும்பிகள் என பல தரப்பினரும் இந்த ஆணைக்குழு சீரமைக்கப்பட வேண்டும் என்று பல பரிந்துரைகள் வழங்கியிருந்தும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தை மாதம் 2015 (இந்த வருடம்) நாம் அனைவரும் ஒரு அரசு மாற்றத்திற்காக வாக்களித்தோம் இதன் பின்னணியில் நல்லாட்சிக்கான ஒரு அரசு உருவாகும் என எதிர்பார்த்தோம்.
இந்த அரசு எங்களுடைய தேடல்கள், வேதனைகள், ஆதங்கங்களை புரிந்து கொள்ளும் என எதிர்பார்த்தோம் ஆனால் இந்த அரசும் எங்கள் குரலுக்கு செவிமடுக்கவில்லை நாங்கள் கவனயீர்ப்பு பேரணிகள் செய்தோம் ஆணைக்குழுவிற்கு எங்கள் பரிந்துரைகளை வழங்கினோம் மாற்றங்களை கோரினோம் ஆனால் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
இதனால் நாங்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை வேண்டி குரல் கொடுத்தோம் எங்கள் சார்பாக சர்வதேச சமூகத்தின் குரலாக ஐ.நா.விடமிருந்தும் உண்மைக்கும் நீதிக்குமான ஐ.நா.வின் விசேட நிபுணரிடமிருந்தும், ஐ.நா.வின் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசேட குழுவிடமிருந்தும் இதற்கும் அப்பால் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நாவின் தீர்மானத்தினூடாகவும் ஒரு அழுத்தமான செய்தி இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது ஆயினும் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் பரிந்துரைக்கும் சர்வதேச சமூகத்தின் குரலுக்கும் மதிப்பளிக்கத் தெரியவில்லை.
எங்களுக்கு இப்போது தேவையானது ஒரு புதிய பொறி முறையே இது நம்பகத்தன்மை உடையதாகவும், எங்களுடைய தேடுதலுக்கு உதவக்கூடியதாகவும் நீதியைப் பெற்றுத்தரக் கூடியதாகவும் அமையவேண்டும்.
நடைமுறையிலுள்ள இந்த ஆணைக்குழுவின் இயலாத்தன்மையையும் அதன் திருப்தியற்ற செயன்முறையையும் கவனத்தில் எடுத்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை இவ்வருடம் மேற்கொண்டிருந்தார்கள்.
இருந்தும் இம்மாதம் 11 முதல் 17ஆம் திகதி வரை (மார்கழி 11 – 17) இந்த ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் தன் அமர்வுகளை நடாத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பான மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளுடன் இணைந்து வடக்குகிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளின் சார்பாக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
அர்த்தமற்றதும், பயனற்றதுமான இந்த ஆணைக்குழுவின் செயலமர்வுகளை பகிஷ்கரிப்பதை தவிர வேறு வழியில்லை இதனூடாக ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோருகின்றோம்.
அர்த்தமுள்ள நம்பிக்கையான புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்கித் தாருங்கள் அதில் நாங்கள் பங்களிக்க ஆயத்தமாக இருக்கிறோம் என்பதே எமது வேண்டுகோளாகும்.
எனவே இந்த ஆணைக்குழுவின் செயலமர்வுகளை புறக்கணித்து பகிஷ்கரிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
வடக்குகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள்