வடக்கில் அரச படைகளின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை எதிர்வரும் ஜனவரிக்கும் விடுவிக்காவிட்டால் கடந்த மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக முன்னெடுத்ததைப்போன்று போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர் காணியுடன் காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார். தமது காணிகளில் வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக்கொண்டாலே காணிகளை மீளப்பெற்ற முழுச்சந்தோசத்தை மக்கள் அடைய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்ற பாரதூரமான பிரச்சினை என்றபோதும் அதனை நாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்று தெரிவித்த அவர் ஆனாலும் தமிழ் முஸ்லீம் மக்கள் காணிகளின்றி நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர் என்றும் 25 வருடங்களாக அவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அவர் யாழில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவித்தாலே அந்த மக்கள் மீள்குடியேற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவத்தை குவித்து இராணுவமயமாக்கி பின்னர் சிங்களமயமாக்கி பௌத்த விகாரைகளை அமைப்பதே மகிந்த அரசின் நோக்கம் என்றும் அதற்கு எதிராக தாம் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் இந்த அரசு சிறுபான்மையினரின் தேவையை இழுத்தடித்தால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.