வடக்கு – கிழக்கு இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் : தயாசிறி புகழாரம்

190

விளையாட்டில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் அதிகமாக உள்ளனர் எனவும், விளையாட்டின் மூலமும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

dayasiri-jayasekara-450x302

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து திறந்துவைத்து உரையாற்றியபோதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தேசிய விளையாட்டுக்களில் வடக்கு, கிழக்கு இளையோரும் பங்குபற்றி பிரகாசிக்க, தற்போது அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு, விளையாட்டுக்கு மட்டுமன்றி, தேசிய நல்லிணக்கத்திற்கும், எதிர்காலத்தில் இளையோரை ஒன்றிணைக்கவும் பெருந்துணை புரியும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விளையாட்டு வீரர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் விளையாட்டுத் திறமைகளை அபிவிருத்தி செய்வதற்காக, அமைச்சின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 36 வீத நிதியை இவ்வருடம் ஒதுக்கியுள்ளது. இது ஒரு வரப்பிரசாதமாகும்.

மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக, இந்த ஆண்டின் தேசிய விளையாட்டு விழாவை வடமாகாணத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய விளையாட்டு நிகழ்வுகளை நாம் வடக்குக்கு கொண்டு செல்வதற்குக் காரணம், வருடக்கணக்கில் விளையாட்டு மறக்கடிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை, வெளியுலகத்திற்குக் கொண்டுவருவதற்கேயாகும். விளையாட்டிலும், திறமைகளை வெளிப்படுத்துவதிலும், நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதிலும் இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகள் இருக்க முடியாது.

விஷேடமாக வடக்கு, கிழக்கில் கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்கக்கூடிய ஆற்றலுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களது திறமைகளளையும், இன்னும் வேறுபல ஆற்றலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவருவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம். விளையாட்டின் மூலமும் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில், நாம் உறுதியாக இருக்கின்றோம்’ என்றார்.

SHARE