வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து, கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தி வரும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி கடந்த 3ஆம் நாள் கொக்கிளாயில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் போர்ப்பயிற்சியில், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் பங்கேற்கின்றனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் கொமாண்டோக்களும், சிறப்புப் படையினருமாவர்.
இவர்களுடன், 245 சிறிலங்கா கடற்படையினரும், 140 விமானப்படையினரும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
இந்தப் போர்ப் பயிற்சியில், பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் 53 படையினரும், இணைந்து கொண்டுள்ளனர்.

மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கைத் தலைமையகத்தில் இருந்து வழிநடத்தப்படும் இந்த போர்ப் பயிற்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கரையோர மற்றும் காட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.

வரும் செப்ரெம்பர் 23ஆம் நாள் புன்னைக்குடாவில் நடக்கவுள்ள போர் ஒத்திகையுடன் இந்தப் போர்ப் பயிற்சி நிறைவடையும்.