வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?

426

 

(சாகரன்)

கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.

அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ  என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் காலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையகத் தமிழ் மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையின் மலைகளைத் தோட்டங்களாக்கிய நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.

இம் மன்னாருக்கு இன்னொரு தியாக வரலாறும் உண்டு. ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 மார்கழி மாதம் ஈபிஆர்எல்எவ் ஐ புலிகள் தங்கள் ஆயுதக்கரங்கள் கொண்டு நசுக்கிய காலகட்டத்தில் இதே மன்னாருக்கு ஈபிஆர்எல்எவ் இன் மலையகத் தலைவர்கள் இந்தியாவில் இருந்து புலிகளினால் நயவஞ்சமாக அழைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்ட துரோகத்தனமும் அங்குதான் அரங்கேறி முடிந்தது. இதில் அன்பரசன் உட்பட 10 இற்கும் மேற்பட்ட மலையக போராளிகள் புலிகளினால் நயவஞ்சகமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மன்னார் மண் மலையக மக்களின் குருதியாலும் வியர்வையினாலும் நனைந்து ஈரமான மண். அதுதானோ புவியியல் ரீதியில் வறட்சி நிறைந்த இம்மண்ணில் இன்றும் ‘ஈரம்’ உள்ளதோ? நல்ல விளை நிலங்கள் உள்ளனவோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து அடிமைகளாக கொண்டு வரப்பட்ட மலையக மக்கள் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரை பாதையமைத்து மலையகம் சென்றனர், செத்து மடிந்தவர்கள் தவிர மீதிப்பேர். மலையகத்தை அடைந்த இம்மக்களுக்கு அங்கே ஓன்றும் சொர்க்க வாழ்கையோ அல்லது இன்று வவுனியா முகாங்களில் உள்ளது போன்ற ‘சாதாரண’ வாழ்க்கையோ காத்திருக்கவில்லை. மாறாக அங்குள்ள மலைக் காடுகளைத் திருத்தி களனியாக்கும் முடிவற்ற, ஓய்வற்ற வேலைகள் காத்திருந்தன. இதில் பல ஆயிரம் மக்கள் சாகடிக்கப்பட்டனர் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலைமைகளினால். தூங்கும் இடம் இல்லை, குளிரைத் தாங்கும் உடைகள் இல்லை, சரியான சாப்பாட்டு வசதிகள் இல்லை, மருத்துவ வசதிகள் ஏதும் இருக்கவில்லை. இவ் அடிமை வாழ்க்கை பற்றி வரலாறு பதிவு செய்துள்ளது. எம்மில் பலர் இதை மறந்திருக்கலாம். ஆனால் நெஞ்சை உருக்கும் மனித வதை வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டதே மலையக மக்களின் வாழ்க்கை.

ஆமாம் மலையக மக்கள் இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்திருந்த குளிர் பிரதேசக்காடுகளை துப்பரவு பண்ணி தேயிலை, றப்பர், கொக்கோ போன்ற பணப்பயிர்களை செய்வதற்காக அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர் என்பதே உண்மை நிலை. பஞ்சம் பிழைக்கும் அடிமைகளாக கொண்டு வரப்பட்டனரே என்பதே யதார்த்த நிலை.

உயிர் வாழ்வதற்கான சாப்பாட்டை பெறுவதற்காக அம்மக்கள் இக்காடுகளை களனியாக்கும் வேலையில் மிருகங்கள் போல் பிரிட்டிஷ் வெள்ளைகாரத் துரைமாரினால் துன்புறுத்தப்பட்டனர். இதற்கு கோடரிக் காம்புகளாக முளைத்த ‘கண்காணிமார்’ தமது எசமானர்களுக்காக ‘விசுவாசமாக’ வேலை செய்தனர்.  அட்டைகடி ஒருபுறம். குளிர் மறுபுறம். மழை, வெயில் இன்னொரு புறம் வேலை நாள் முடிவில் சரியாக படுத்துறங்க இருப்பிடமின்மை மறுபுறம் என ஓய்வு ஒளிச்சல் இன்றி வேலை செய்தனர் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இயலுமைக்கு மீறிய உடல் உழைப்பால் மலையகத்தை இலங்கையின் ஏன் உலகத்தின் சொர்க்க பூமியாக மாற்றினர்.

இந்த உழைப்புத் தியாகத்தின் விளைவால் எமது மலையகம் செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றப்பட்டது. உலகின் முதல்தர தேயிலை உற்பத்தியை செய்தது. முதல்தர இயற்கை றப்பரை உருவாக்கியது. கறுவா, கொக்கோ போன்ற சுவைப் பொருட்களை சர்வ தேச சந்தைக்குக்  கொண்டு வந்தது. ஆனால் இவற்றை உற்பத்தி செய்த மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் அதல பாதாளத்தில் சென்று தகரங்களினால் சூழுப்பட்ட லயன்களுக்கள் குறுகிக் கொண்டது. பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இன்று வவுனியாவில் முள்ளுக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் மக்களுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களைவிட மோசமான தரத்தையே லயன்கள் கொண்டிருந்தன. வவுனியாவில் முகாங்களில் உள்ளவர்களின் பிரஜா உரிமை இன்று பறிக்கப்படவில்லை ஆனால்  அன்று மலையகத் தமிழ் மக்களுக்கு இந்திய வம்சாவழியினர் அந்நியர்கள் என்ற பெயரில் குடியுரிமைகள் மறுக்கப்பட்டன, வாக்குரிமை பறிக்கப்பட்டது.

அப்போது பாராளுமன்றத்தில் இருந்த தொண்ணூறு பேரில் ஏழு பேர் – அதாவது 13 சதவீதமானோர் மலையகத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பதவி இழந்தனர். மிதவாத தமிழ் தலைவர்கள் யாரும் இந்த குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறித்ததற்கு எதிராக மலையக மக்களோடு இணைந்த போராடவில்லை – அவர்களுக்காக உண்மையான உணர்வுடன் குரல் கொடுக்கவும் இல்லை. கேவலம் நாலு தொழிற் சாலைகளுக்காக 10 இலட்சம் பேரின் வாக்குரிமை பறிப்புக்கு தமிழ்த் தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தனர். பின்னர் 6 இலட்சம் மக்களை நாடு கடத்தும் ஒப்பந்தத்தின் போதும் கண்மூடி மௌனிகளாக இருந்ததுவும் அதே தமிழ்த் தலைமைகள்தான்.

எஞ்சிய மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் எந்த நாடும் சொந்தமற்ற நிரந்தர அகதிகள் ஆக்கப்பட்டனர் என்பது வரலாறு. இவற்றின் தொடர்சியாக கடந்த அரை நூற்றாண்டிற்;கு மேலாக அம்மக்கள் நடத்திவரும் போராட்டங்களினால் ஒரு பகுதியினர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட இன்னொரு பகுதியினர் இலங்கைப் பிiஜா உரிமையைப் பெற்றனர் என்பது வரலாறு. ஆனால் அவர்களின் வாழ்கைத்தரம் இந்த அரை நூற்றாண்டில் உயர்ந்ததா என்றால் இல்லை என்பதே பதில். இலங்கையின் ஏற்றுமதியினாற் கிடைக்கும் உண்மையான வருவாயில் 50 வீதத்தினை ஈட்டிக்கொடுக்கும் மக்களின் நிலை இதுதான். ஆனால் அம் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தில் எப்போதுமே சோர்ந்து போய்விடவில்லை மாறாக தொடர்ந்தும் போராடியே வந்திருக்கின்றனர். அவர்களிடையே பத்துக்கும் மேற்பட்ட அரசியற் கட்சிகள் தொழிற்சங்கங்களென இருப்பினும் மலையக மக்களின் அடிப்படை உரிமையென வரும்போது அவை ஒன்றுபட்டுச் செயற்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

அண்மையில் சம்பள உயர்வு கோரி நடத்திவரும் போராட்டம் எமக்கு சிறப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லி நிற்கின்றது. ஐக்கியப்பட்டு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினால் எதுவும் சாத்தியம் என்பதே அது… ஆமாம் கட்ந்த காலங்களிலும் தமது சம்பள உயர்வு கோரி நடத்திய போராட்டங்பகளில் சகல தொழிலாளர் சங்கங்களும் ஒரு அணியில் ஐக்கியப்பட்டு நின்று ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடியதன் விளைவாகவே மலையக மக்களினால் தமது கோரிக்கைகளின் பெரும் பகுதியை வென்றெறுக்க முடிந்தது. இப் போராட்டத்தின் அறுவடை ஐக்கியத்தின் பலத்தையும் தேவையினையும் அது எவ்வாறு சாத்தியப்படுத்தலாம் என்பதனையும் எதிர்வு கூறி நிற்கின்றது.

மலையக தொழிலாளர் மத்தியில் அரசு சார்பான சங்கங்கள், அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் சங்கங்கள், எதிர் கட்சிகளின்; சங்கங்கள், இடதுசாரிகளின் சங்கங்கள் என பல சங்கங்கள், அமைப்புக்கள் இருந்த போதும் அவர்கள் தமக்கிடையேயான ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்து ஒருமைப்பாடான கோரிக்கையை முன்வந்து ஒருமித்த குரலில் நின்று போராடினார்கள் – தொடர்ந்து போராடுகிறார்கள். பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அரசில் அங்கம் வகித்துக் கொண்டே அரசிடம் நீதி கேட்டுப் போராடினார்கள். முதலாளிமார் சம்மேளத்துடன் ‘பேரம்’ பேசினார்கள். விட்டுக் கொடுப்புக்களையும் செய்தனர். இதனால் சோரம் போகாமல் தமது கோரிக்கையை வென்றெடுத்தார்கள். இப் போராட்டத்தில் அவர்கள் நம்பியது ஐக்கியப்பட்ட மக்கள் சக்தியையே. மாறாக கடற்படை, தரைப்படை, கரும்படை, வான்படை, ஈர்ஊடகப்படை, உந்துருளிப்படை, தற்கொலைப்படை கடற்புலி என எதையும் கொண்டிருக்கவும் இல்லை. அவற்றை விட அவர்களின் மக்கள் சக்தி மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.  மலையகத் தலைவர்கள் வேற்றுமைக்குள் ஒற்றுமைகளைக் காண்கிறார்கள் – ஓரணி ஆகிறார்கள் – மக்களை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டிப் போராடினார்கள் வென்றார்கள்.

இவ் இராஜதந்திர அணுகுமுறையை இன்று அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும், தமிழர்களின் உரிமைகளின் குத்தகைக்காரர்கள் தாமே என எண்ணும் தமிழ் எதிர்க் கட்சிக்காரர்களும் பின்பற்றலாம்தானே. மலையகத் தலைவர்களின் இராஜதந்திர அணுகுமுறையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம். – முயன்றால் ஏதும் முடியாது என்பதில்லை. தேர்தலுக்காக வேண்டுமென்றால் நீங்கள் தனித்தனிக் கட்சிகளாக நின்று கொள்ளுங்கள். ஆனால் தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைகளுக்காக ஒன்று கூடுங்கள் –  முடிந்த விடயங்களிலெல்லாம் ஒற்றுமைப்பட்டு நின்று செயற்படுங்கள் ஓரணியாகக் குரல் எழுப்புங்கள். ஒருமித்து நின்று போராடுங்கள்.  நண்பர்களே, அன்பர்களே, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக நிற்கும் தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களே! கருத்துக்களைப் பரிமாருங்கள். ஆரோக்கியமாக விமர்சியுங்கள் பொதுவிடயங்களில் எதிரிகளாக நிற்காதீர்கள். ஒரு சமூகத்தில் வௌ;வேறு கருத்துக்குளின் இருப்பு யதார்த்தமே. வேவ்வேறு கருத்துக்கள் வெளிப்படட்டும். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான விமர்சனம் சுயவிமர்சனம் ஆகியவையும் அவசியமே. அதேபோல மக்களின் அத்தியாவசியங்களைக் குறித்து ஒற்றுமையான அணிதிரளலும் அவசியமே.

இது போன்ற ஐக்கியமே, ஒற்றுமையே வடக்கு கிழக்கின் அரசியல்- சமூக நிலைமை முன்னேற்றகரமான பாதையில் இட்டுச் செல்லும். இது இன்றைய அவசிய, அவசரத் தேவையாகும். அமைச்சர்கள் கட்சியாக இருக்கட்டும். யாழ் நகரில் தோற்றவர்களாக இருக்கட்டும். வவுனியாவில் வென்றவர்களாக இருக்கட்டும். கிழக்கை ஆள்பவர்களாக இருக்கட்டும், தமிழ் இடதுசாரிகளாக இருக்கட்டும் ஏனைய தமிழ் அரசியல் அமைப்புக்களாக இருக்கட்டும் இவர்கள் தமக்கிடையே ஒரு குறைந்த பட்ச உடன்பாட்டிற்கு வரவேண்டிய வரலாற்று சூழ் நிலையில் தமிழ்ச் சமூகம் தற்போது உள்ளது. மற்றவர்களை முற்றாக நிராகரித்து விட்டு தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் தனிப்பிரதிகளாக இருக்க வேண்டும் – ஆக வேண்டும் என்ற அணுகுமுறையைக் கைவிட்டுவிட்டு பல்வேறு ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையை பின்பற்றுங்கள்.  நிச்சயமாக உங்களால் ஐக்கியப்பட முடியும். மக்கள் போராளி பத்மநாபாவால் 1985 – 6 ல் செய்துகாட்ட முடிந்தது. மேலும் 1988 – 9 லும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவர் வழியில் செயற்பட முனைந்தால் மக்கள் போராட்டத்தை முன்னிறுத்த நினைக்கும் உங்களாலும் செய்ய முடியும். நடந்து முடிந்த தேர்தல் ‘கசப்பு’ ‘பசப்பு’ களை மறவுங்கள். மக்களை முன்னிலைப்படுத்தி ஐக்கியப்படுங்கள்.

இப்போது அழிக்கப்பட்டிருப்பது ஆயுதப்புலிகள் மட்டும்தான் கதிரைப்புலிகள் அல்ல. ஆண்டபரம்பரை, தேசியம், தாயகக் கோட்பாடு என்று வாக்குறுதி கூறி ‘தமிழ் பசப்பு’கள் நாற்காலிகளை நிரப்புவதையும், மக்களை இன்னும் பல தலைமுறைக்கு நாசப்படுத்துவதற்கும் மக்களுக்கு ‘வாய்;கரிசி’ போடவும் கதிரைப்புலிகள் அடித்தளம் போட்டு விடுவார்கள். இதுவே மேற்குலக நாடுகளின் விருப்பும் கூட. இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகள் இந்தியா, சீனா போன்றவற்றின் வளர்ச்சியும், இந்நாடுகளும், ஏனைய ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளும் இலங்கை அரசுடன் ஏற்பட்டுவரும் ‘நட்பு’ இதனையே அமெரிக்க சார்பு நாடுகளை எடுக்கத் தூண்டுகின்றது என்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. மேற்குலக நாடுகள் அரசியல் தீர்வைக் கடாசிவிட்டு ‘மனித உரிமை மீறல்’ என்று யுத்தத்தின் கடைசித் தின நிகழ்வுகளை தூக்கிப்பிடித்து ‘யுத்த தர்ம மீறல்’ என்ற குற்றச்சாட்டுகள் இதனையே கட்டியம் காட்டி நிற்கின்றன. முள்ளுக்கம்பி முகாம் பற்றி ‘அதிகம்’ பிரஸ்தாபிப்பதுவும் இதன் ஒரு வடிவமே. மற்றபடி ‘ஆடு நனையுது என்று ஓநாய் அழுத’ கதைதான்.

தமிழ்மக்களின் மீள்குடியேற்றம், புனருத்தாரணம் புனர்வாழ்வு இதன் தொடர்சியேயான அரசியல் தீர்வுத்திட்டம் போன்றவற்றில் ஒரு பொது முடிவை எட்டி அதன் அடிப்படையில் தமது கோரிக்ககைகளை வைத்து இலங்கை அரசுடன் பேசுவதற்கு தயாராக வேண்டும். இதில் நீ பெரிது நான் சிறிது. நாம் அமைச்சர், நீ முதல் அமைச்சர். நான் மேயர் நீ பேயர். நான் சண்டியன் நீ கோழை என்ற சின்னத்தனமான விடயங்களைத் தவிர்த்து செயற்பட வேண்டியது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.

தமிழ் பேசும் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி இலங்கையில் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காக சமாதான விரும்பிகளும் ஜனநாயக சக்திகளும், முற்போக்கு சக்திகளும் தமக்கிடையே ஒரு குறைந்த பட்ச பொதுக் கருத்தியல் அடிப்படையிலே ஆகினும் ஐக்கியப்படல் வேண்டும். இதன் அடிப்படையில் வேலைத்திட்டங்களை வரைந்து செயற்படுதல் வேண்டும்.

இதுவே தமிழ் மக்கள் இலங்கையில் அங்கு வாழும் ஏனைய இனங்களுடன் சம உரிமை பெற்று சகவாழ்வு வாழ வழி வகுக்கும் ஆரம்ப நிலையை ஏற்படுத்த உதவும். இதற்கான ஐக்கியத்தின் தேவையையையும் அதனால் ஏற்படப் போகும் வெற்றிகளையும் எமக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் பாடமாக கற்றுத் தந்துள்ளது.

வரலாற்றில் ஐக்கியத்தினால் ஏற்பட்ட வெற்றிகளை இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் கிட்லரின் நாஸிசத்திற்கு எதிராக அமெரிக்கா, பிரித்தரினியா என்பவற்றுடன் அமைத்துக் கொண்ட ஐக்கிய முன்னணி; 1940 களில் சீனாவில் மாவோ சேதுங் உள்நாட்டு யுத்தத்தை தவிர்க்க கோமிந்தாங்கை நண்பனாக ஏற்று ஐப்பானுக்க எதிராக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய முன்னணி; பிலிப்பைன்சில் முஸ்லீம் மக்கள் பிலிப்பைன்ஸ் கம்யூனிட் கட்சியுடன் அமைத்துக் கொண்ட ஐக்கிய முன்னணி; பாலஸ்தீன விடுதலை அமைப்புக்களுக்கு இடையேயான ஐக்கிய முன்னணி; திம்பு பேச்சு வார்த்தையில் ஈழவிடுதலை அமைப்புக்களுக்கடையேயான ஐக்கிய முன்னணி; என பலவற்றை கூற முடியும். இவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிட்டாலும் நேற்று நடந்து முடிந்த மலையக மக்களின் போராட்டத்தில் இருந்தாவது கற்றுக் கொள்வோம்.

மலையக மக்களின் போராட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களும் இணைந்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். வடக்கு கிழக்கில் மக்களை வீதிகளுக்கு இறக்கி போராடும் ‘நிலமைகள்’ இல்லை என்ற சாக்குப் போக்கு ஏற்புடையது அல்ல. சக பிரிவு மக்களின் போராட்டங்களுடன் இணைவதன் மூலமே அவர்களும் எமக்காக குரல் கொடுக்கும் நிலமைகள் அவர்கள் மத்தியில் இருந்தும் ஏற்படும். தற்போது ஏற்பட்ட வாய்புக்களை வடக்கு கிழக்கு மக்களுக்கு தலமை தாங்குபவர்கள் தவற விட்டுவிட்டனர் என்பதே வருத்தத்திற்குரிய விடயம். எதிர்காலத்தில் ‘கடைசி பஸ்’ ஐயும் தவறவிடும் நிலமைகளைத் தவிர்க்க வேண்டும். எனவே ஐக்கியப்படுவோம், பலமடைவோம், எமது உரிமைகளை வென்றெடுப்போம். நிரந்தர சமாதானத்தை நிலை நாட்டுவோம். எல்லோரும் சம உரிமையுடன் சந்தோஷமாக வாழ்வோம். அதற்கான பயணத்தை இக்கணத்திலிருந்தேனும் ஆரம்பிப்போம்.

‘ஐக்கியமே எமக்கு இன்று முக்கியம்’

SHARE