முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் எனவும், தெற்கு முஸ்லிம்கள் எனவும் இரண்டாகப் பிரிகிறார்கள். இவர்களிடையே தவிர்க்க முடியாத சில வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மை. அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும்போது தான் எம் சமூக ஒழுங்கமைப்பு முயற்சிகளையும் அதற்கான போராட்டங்களையும் சரியான முறையில் கொண்டு செல்வது சாத்தியமாகும்.
தெற்கு முஸ்லிம்கள் நிலத்தொடர்பற்று சிதறி வாழ்கிறார்கள். சிங்களக் கிராமங்கள் மிகப் பெரியளவு அவர்களின் கிராமங்களைத் துண்டாடுகின்றன. மிகக் குறைவான சனத்தொகை கொண்ட சின்னஞ்சிறு முஸ்லிம் கிராமங்களையே தெற்கில் நாம் கணிசமானளவு காண்கிறோம். தெற்கு முஸ்லிம்கள் எந்த மாவட்டத்திலும் 10வீததிற்கு மேற்பட்டவர்களாக இல்லை. மத்திய கொழும்பு, கண்டியில் சில காரணங்களால் மாத்திரம் முஸ்லிம்கள் செறிவாகவும், ஒப்பீட்டு ரீதியாக பெரும் சனத்தொகை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தவகையில் நிலத்தொடர்பற்ற குடியமைவும், குறைவான சனத்தொகை விகிதாசாரமும் தெற்கு முஸ்லிம்களின் பிரதான பௌதீக அம்சங்களாக விளங்குகின்றன.
இதற்கு நேர்மாற்றமாக கிழக்கு முஸ்லிம்கள் அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சனத்தொகையிலும் 25 வீதத்திற்கும் அதிகமாக வாழ்கின்றனர். சில பகுதிகளில் நிலத்தொடர்பற்ற குடியமைவை அவர்கள் கொண்டிருக்கின்ற போதும் மிகப்பெரும் கிராமங்களிலும் அவர்களுக்கே உரிய தனியான நகரங்களிலும் செறிவாக வாழ்கின்றனர். தென்கிழக்குப் பகுதியில் மாத்திரம் நிலத்தொடர்புள்ள செறிவான குடியமைவைக் கொண்டுள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தெற்கு முஸ்லிம்களைப் போன்றே சிதறி, நிலத்தொடர்பற்று, குறைந்த சனத்தொகையாக வாழ்கிறார்கள். எனினும் வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தன்மையைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களோடு உடன்படுகிறார்கள்.
இரண்டாவது முக்கிய அம்சம் : வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தன்மையாகும். சமூக, பொருளாதாரக் கல்விப் பிரச்சினைகள் எந்த சிறுபான்மையினருக்கும் பொதுவானதாகும். பொதுவாக முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினைகளை எல்லாப் பகுதிகளிலும் எதிர்கொண்ட போதும்கூட வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் வித்தியாசமானதாக விளங்குகின்றது. இக்கருத்ததைக் கீழ்வருமாறு நோக்க முடியும்.வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்னொரு பெரும் சிறுபான்மையோடு இணைந்து வாழ்கிறார்கள்.
இவ்விரு சிறுபான்மையினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பலவகையில் ஒரே அமைப்பைக் கொண்டவை. சமூக, பொருளாதார, கல்விப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அரசியல் அதிகாரம் மிக முக்கியமானதாகும். அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கான போராட்டமொன்றை இரு சிறுபான்மைகளும் குறிப்பிட்ட சில உடன்பாடுகளுடாகக் கொண்டு சென்றிருக்க முடியும். அப்போது பாரியதொரு அரசியல் சக்தியாக இரு சிறுபான்மையினரும் வளர்ந்திருக்க முடியும். பல சாதனைகள் படைத்திருக்கவும் முடியும். முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் செறிந்து வாழ்வதும் தென்கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்வதும் இக்கருத்திற்க மேலும் பலமூட்டுவதாக அமைய முடியும்.
ஆனால் நடந்தது என்ன? ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலையும் தெற்கு அரசியல் தலைவர்களே கையில் வைத்திருந்தார்கள். அவர்கள் நேர்மையான அரசியல் தலைமைகளா? இல்லையா என்பது ஒரு புறமிருக்கட்டும். அதன் விளைவு என்னவாக அமைய முடியும் என்பதை மட்டும் நோக்குவோம். தெற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் மத்தியில் சிதறுண்டு வாழ்கின்றனர். எனவே பெரும்பான்மையினர் தயவில் ஓரளவு தங்கியிருந்தே அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். இந்த அரசியல் தந்திரோபாய முறைமையை அவர்கள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மீதும் திணித்தார்கள். விளைவு மூன்று வகையாக அமைந்தது.
வடக்குஇ கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகள் உரியமுறையில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. எப்படித் தெற்கில் தனித்திருந்த முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லையோ அதே நிலமை கிழக்கில் பெரியகிராமங்களுக்கும் ஏற்பட்டது.
2. வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சியற்றவர்களாக நீண்டகாலமாக விடப்பட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு மத்தியிலிருந்து அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படவில்லை. அவர்கள் தெற்குத் தலைமைகளைப் பின்பற்றும் தம் அரசியல் பிரதிநிதிகளை அனுப்புபவர்களாக மட்டும் இருந்தார்கள்.
ஒதுங்கினார்கள். ஆரம்பத்திலிருந்தே தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் தனித்துவத்தை ஏற்காது தமிழர்களாகவே அவர்களையும் பார்த்தார்கள் என்பது உண்மை. ஆனால் அந்தக் கருத்தை முஸ்லிம்கள் வென்றிருக்க முடியும். வடக்கு, கிழக்கில் சரியானதொரு சாணக்கியமிக்க அரசியல் தலைமை தோன்றியிருப்பின் தமிழ்த் தலைமைகளோடும் புத்திஜீவிகளோடும் அத்தலைமை நடாத்தும் நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள் பல திருப்பங்களை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும். ஆனால், தெற்கு அரசியல் தந்திரோபாய முறை வடக்கு, கிழக்கிலும் திணிக்கப்பட்டமையால் அப்படியானதொரு சிந்தனை உருவாகாமலே போய்விட்டது.
இறுதியில் தமிழர்களின் அரசியல் போராட்டம் தனியே வளர்ந்து அதன் தீவிரநிலையை அடைந்தது. அதன் எதிர் விளைவாகவே வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் போக்கு தோன்றத் துவங்கியது. வடக்கு, கிழக்கு தமிழ்-முஸ்லிம் அரசியல் போராட்டங்கள் கடைசியில் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் மோதும் நிலை கொண்டதாகவுமே அமைந்துவிட்டது. தெற்கின் அரசியல் தந்திரோபாய ஒழுங்கு வடக்கு, கிழக்கில் திணிக்கப்பட்டமை இதற்குப் பிரதான காரணமாக அமைந்துவிட்டது என்பதனை நுணுக்கமாக ஆராயும் எவரும் மறுக்க மாட்டார்கள். இதுதான் வரலாற்று உண்மையும் கூட.
இந்தப் பின்னணியில்தான் வடக்க, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் போராட்ட ஒழுங்கு வித்தியாசமானது என்கிறோம். தயவுசெய்து அதனைத் தெற்கு முஸ்லிம்களின் அரசியல் போக்கோடு சேர்த்துக் குழப்ப வேண்டியதில்லை. அவ்வாறு குழப்புவது இரு பிரிவினர் நலன்களுக்கும் பாதகமாகவே அமையும். இங்கு வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கும் தெற்கு முஸ்லிம்களுக்குமிடையேயுள்ள ஒற்றுமையை இது குலைப்பதாக அமையும் என்னும் வாதம் அர்த்தமற்றதாகும். ஏனெனில் பௌதீக, அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப போராட்ட ஒழுங்குகளும் மாறுபடுவது இயல்பானது. தவிர்க்க முடியாதது. இஸ்லாம் மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கிலான தேசம் என்ற கருத்தியலுக்குப் பதிலாக ‘உம்மா’ என்ற கருத்தியலை முன்வைக்கிறது. இதன் பொருள் பௌதீக எல்லைகள் கொண்ட நாடொன்று இஸ்லாத்திற்கு இல்லை என்பதன்று. அப்படியானதொரு நாட்டை அது உருவாக்க முயற்சிக்காது என்பதன்று. சர்வதேச உம்மத் பற்றி அது பேசுவதால் அதனையே அது இலக்காகக் கொள்ளும். அதற்கு முன்பான பௌதீக எல்லைகள் கொண்ட நாடுகளை உருவாக்காது என்பதுவும் இதன் பொருளன்று. மாற்றமாக இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட சுயநிர்ணய உரிமையும் பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட அல்லது முஸ்லிம் ஆதிக்கமுள்ள நிலப்பகுதியும் இஸ்லாத்திற்குத் தேவை.
அப்படியானதொரு நிலமை எங்காவது காணப்படுமாயின் அதற்காகப் போராடுவது ஒரு இஸ்லாமியனின் கடமையாகும். எந்தளவு தூரம் முஸ்லிம்கள் அரசியல் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும் கொண்டவர்களாக உள்ளார்களோ அந்தளவு அவர்கள் இஸ்லாமியர்களாக வாழ்வதும் சாத்தியமாகும். இந்தவகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் போராட்டம் தனித்துவமாக அமைவது அவசியமாகிறது. இஸ்லாமிய மார்க்கமும், கலாச்சாரமும் முஸ்லிம்களைப் பலமாகப் பிணைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அதுவே இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படையும் கூட. ஆனால் அந்த மார்க்கத்தையும் கலாச்சாரத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வர அரசியல் சுதந்திரம் அவசியமானது, தவிர்க்க முடியாதது. எந்தப் பூமியில் முஸ்லிம்களால் அந்த சுதந்திரத்தைப் பெற முடியுமோ அங்கு அதற்கமைய அவர்களது அரசியல் போராட்டத்தை அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதுவே ஓர் இஸ்லாமியவாதியின் சிந்தனைப் போக்காகும். காஷ்மீரில் இஸ்லாமியவாதிகள் சுயநிர்ணய உரிமைக்காக, அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்களாயின் இந்திய முஸ்லிம்களை விட்டு அவர்கள் வாழும் நில அமைப்பும், சனத்தொகை ஒழுங்கும் வித்தியாசப்பட்டிருக்கின்றமையே காரணம். இந்திய முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு இது பாதகமாக அமைகிறது என்றோ ஒரே கலாச்சாரமும் மார்க்கமும் கொண்டவர்கள் வித்தியாசமான இரு அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கலாமா என்றோ யாரும் வினா எழுப்ப வேண்டியதில்லை. இஸ்ரேலில் 1948ம் ஆண்டிற்குட்பட்ட பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் உள்ளனர். அதற்கு வெளியில் காஸாவிலும், மேற்குக் கரைப்பகுதிகளிலும் குதுஸிலும் வாழும் முஸ்லிம்கள் உள்ளனர். 1948ம் ஆண்டுப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் ஆயுதமேந்திப் போராடவில்லை. சாத்வீகப் போராட்டமொன்றை அவர்கள் கொண்டு செல்கின்றனர். வெளியிலுள்ள ஹமாஸ் போன்ற இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இதனால் அவர்களது ஒற்றுமை குலையவில்லை. இது அரசியல் கருத்துவேறுபாடன்று.
வாழும் பௌதீக, சமூக நிலைகளின் வேறுபாடு, அவற்றின் இயல்பான விளைவு. வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கும் தெற்கு முஸ்லிம்களுக்குமிடையிலான வேறுபாடும் இந்த வகையானதே. அரசியல் போராட்ட ஒழுங்கின் வித்தியாசம் பல்வகையிலான ஒற்றுமைக்கும் ஒத்துழைப்புகளுக்கும் பங்கம் விளைவிக்காது. அந்தவகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கும், தெற்க முஸ்லிம்களுக்குமிடையில் காலாகாலமாக பல உறவுகள் இருந்து வருகின்றன. மார்க்கமும், கலாச்சாரமும் அவர்களை மிக இறுக்கமாகப் பிணைத்துள்ளன.
இரு பிரிவினர்களுக்கும் மத்தியிலான அரசியல் உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும். சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வொழுங்குகள் எப்படி அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமைப்பட்டு அமைய வேண்டும். இஸ்லாமிய சகோதரத்துவத்தையும், பாதிக்காது அவர்களது போராட்டங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பவற்றை சித்தாந்த ரீதியாக வகுப்பது புத்திஜீவிகளின் பணியாகும். எமக்கு இப்போது தேவைப்படுவதும் இதுவே!