வடக்கு மாகாணத்தை பிரித்து போராட்டம் நடத்தப்படும்-எச்சரிக்கை

129

 

இந்தியா தமிழ் நாடு மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வடக்கு மாகாணத்தைப் பிரித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முடக்கி போராட்டம் நடத்தப்படும் என யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் நாடு இராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நியாயமற்றது . தங்கச்சிமடம் பகுதியில் சில மீனவர்கள் இலங்கையில் உள்ள தமது படகுகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்துவதாக அறிகிறோம். அவர்களின் போராட்டத்தை வடமாகாண மீனவர்கள் ஆகிய நாம் நியாயமற்ற போராட்டமாகவே பார்க்கிறோம்.

ஏனெனில் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு படகுகள் சட்டத்தின் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய படகுகளை நீதிமன்ற உத்தரவின் பெயரில் படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் செய்வது இலங்கை இறையாண்மையை பாதிக்கின்றது.

இந்தியாவிலுள்ள வடபகுதி மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துக் கொண்டு தங்களுடைய படகுகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருவது நியாயமற்றது.

வட மாகாண மீனவர்கள் இந்திய இழுவைப்படகு தொழில் முறையினால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தொடர்ச்சியாக பல கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழ் நாட்டில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் இரண்டாயிரம் படகுகளால் வடபகுதியில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சம் பேர் பாதிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் இந்திய நாட்டுக்கோ தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எமது நியாயமான கோரிக்கையை பலமுறை இந்திய அரசாங்கத்திடமும் தமிழக மீனவர்களிடமும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

தமிழக மக்களின் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் நாட்டு முதல்வருக்கும், மக்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நிவாரண பொருட்களை வைத்துக்கொண்டு நமது பிரச்சினையை தீராத பிரச்சினையாக மாற்றக்கூடாது.

நாம் இன்று பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளோம் என்பது உண்மை தான் அதற்கு இந்தியா உதவுவதை விட்டு நம் மகிழ்ச்சி அடைவதோடு அதற்கு பரிகாரமாக மீனவர்கள் ஆகிய நாம் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழக மக்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.

மேலும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பில் வடமாகாண ஆளுநர் ,அரச அதிபர் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஆகியோருக்கு பலமுறை தெரிவித்தும் பயனில்லை. வடக்கு மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் எமது பிரச்சினை தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்கள்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்த தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் சந்தித்தபோது நமது மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமாக இதனையும் பேசவில்லை.

எனவே எமது மீனவர் பிரச்சினை தொடர்பில் இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தாது, எமது வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் உறுப்பினர்களின் வீடுகளில் கட்சி அலுவலகங்களை முடக்கி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதியுடன் மீன்பிடித்தடை காலம் தமிழ் நாட்டில் நீக்கப்படும் நிலையில், எல்லை தாண்டி வரும் மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் உதவுவதற்கு முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE