வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்ப்பதாகவும், எனினும் அந்த கட்சி கடும்போக்குக் கொள்கையை பின்பற்றும் எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்க முடியாத நிலை காணப்படுவதால் கூட்டமைப்பு இதற்கு அனுமதிக்கும் எனவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுனர் மற்றும் கொழும்பிலுள்ள மத்தியரசுடன் மோதும் விக்னேஸ்வரனின் கொள்கைகள் கொழும்பு அரசுடன் இணக்கப்பாட்டை பேணுவது என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு முரணானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்களை அவர் முற்றாக புறக்கணித்து வருகின்றார்.
இதன் காரணமாக மத்திய அரசால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட 75 வீத நிதி திரும்பிச்சென்றுள்ளது.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சமநிலையான, யதார்த்த பூர்வமான அணுகுமுறையை பின்னபற்ற வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.