வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி

359

 

வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

download

தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதில் அளிக்கும் முகமாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த கூட்டத்தில் செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு முழுமையான தடைவிதிக்கப்பட்டு நடைபெற்ற நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

மேற்படி கட்சிகள் சார்பில் முறையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர் சிவநேசன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்தின் நிறைவில் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் அவை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றோம். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், மற்றும் அரசியல் கட்சிசார்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறோம்.

இதனுடைய முக்கியமான நோக்கம் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதும், தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரரேரணை எந்தளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதனை பார்த்துக் கொள்வதுமாக இருக்கும்.

இதற்காக இந்த அவை, இரு குழுக்களை பிரித்துள்ளது. அதில் ஒரு குழு அரசியல் தீர்வு விடயத்தையும், மற்றைய குழு தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினை விடயத்தையும் ஆராயும்.

இதனடிப்படையில் நாங்கள் தொடர்ந்தும் கூட்டங்களை கூட்டி பேசுவோம். தொடர் நடவடிக்கைகளையும் எடுப்போம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்படி அவையின் இணைத் தலைவர்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி லக்ஸ்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டம் நிறைவடைவதற்கு சற்று முன்னதாக வெளியேறிய முதலமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பாக கேட்டபோது நான் முன்னரைப்போன்று
இப்போதும் ஊமை தான் எனக் கூறிவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE