இந்திய மீனவர்களின் றோளர் படகுளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன.
இந்திய மீனவர்கள் றோளர் படகுகள் மூலம் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பாவித்து வடபகுதி கடற்பரப்பில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பதால் மீன் உற்பத்தியாகும் பவளப்பாறைகளும் நீருக்கு அடியில் இருக்கும் தாவரங்களும் அழிவடைவதால் இப்பிரதேசத்தில் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் உள்ளுர் மீனவர்களின் வலைகளை றோளர் படகுகள் சேதப்படுத்தி வந்தால் அவர்களின் வலைகளும் சேதமடைந்து பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை சந்தித்து வந்தனர்.
கடந்த காலங்களில் போரினால் வடமராட்சி கிழக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். 6 தடவைகளுக்கு இடம்பெயர்ந்ததுடன் இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் சிக்கி வவுனியா அகதி முகாம்களின் பலகாலம் இருந்து மீண்டும் தமது பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள்.
சுனாமியாலும் இப்பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தில் சுனாதியால் பாதிக்கப்பட்ட ஒரேஒரு பிரதேசம் வடமராட்சி கிழக்கு பிரதேசமாகும். சுனாமியால் தொழில் உபகரணங்களை முற்றாக இழந்ததுடன் ஆயிரக்கணக்கான மக்களும் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய தொடர் பாதிப்புக்களிலிருந்து தப்பி மீண்டும் தொழிலை ஆரம்பித்திருக்கும் போது இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் தொல்லைகளும் அச்சுறுத்தல்களும் சூழ்ந்திருக்கிறது.
தற்போது இந்திய மீனவர்களின் வரவு குறைவடைந்த போதிலும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
நீர்கொழும்பு, புத்தளம் கற்பிட்டி சிலாபம் பகுதிகளிலிருந்தே இவர்கள் வந்துள்ளனர். ஓவ்வொரு அணியிலும் 15, 20 படகுகளும் அதில் 50க்கு மேற்பட்டவர்கள் தொழில் செய்கின்றனர்.
பருத்தித்துறை நகருக்கு கிழக்காக முனை மூர்க்கம் கடற்கரைப்பகுதியில் இரு அணியினர் வாடி அமைத்துள்ளனர். இதில் 50க்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் மேற்கில் ஆகிய இடங்களிலும் ஒவ்வொரு அணியினர் உள்ளனர். குடாரப்பு செம்பியன்பற்று வடக்கு தாளையடி ஆகிய இடங்கயளில் பெரிய அளவில் 30க்கு மேற்பட்ட வாடிகள் அமைத்து அதில் நூற்றக்கணக்கானவர்கள் தங்கியிருந்து தொழில் செய்கின்றனர்.
மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் அனுமதி வழங்காததால் அப்பிரதேசங்களில் கடல் அட்டை பிடிப்போரின் வாடிகள் அமைக்கப்படவில்லை என்றாலும் இக்கிராமங்களை சேர்ந்த கடற்பகுதியில் அவர்கள் கடல் அட்டைகளை பிடித்து வருகின்றனர்.
ஒட்சிசன் கொள்கலங்களை பொருத்திக்கொண்டு கடலின் அடிக்கு சென்று கடல் அட்டைகளை பிடிப்பதுடன் வர்ணமீன்களையும் பிடிக்கின்றனர்.
தென்னிலங்கையை சேர்ந்த பணவசதி படைத்த சிங்கள முஸ்லீம் முதலாளிகளே தொழிலாளர்களை வைத்து கடல் அட்டை பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
இதனால் உள்ளுர் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
அனுமதி பெற்று கடல் அட்டை பிடித்தாலும் 5 கிலோ மீற்றருக்கு அப்பால்தான் அவர்கள் பிடிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்த வரையறைகள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. உள்ளுர் மீனவர்கள் மீன்பிடிக்கும் எல்லைக்குள் கடல்அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொள்வதால் உள்ளுர் மீனவர்களின் வலைகளை அறுத்து செல்கின்றனர் என்றும் ஒக்சினனை கட்டிக்கொண்டு கடல் அடியில் இத்தொழிலை செய்வதால் கரைக்கு மீன்களின் வரத்தும் பெரிதும் குறைந்துள்ளது.
கடலுக்கு அடியில் மயக்க மருந்து அடித்தும் பெரிய மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர். இரவு வேளைகளில் இவர்கள் அதி ஒளிகூடிய வெளிச்சத்தை பாச்சுவதாலும் மீன்உற்பத்தி குறைவடைவதுடன் கரைக்கு வரும் மீன்களும் குறைவடைவதாக உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலுக்கு அடியில் இருக்கும் பவளபாறைகள் மற்றும் தாவரங்களுக்கிடையே தான் மீன்கள் முட்டை இட்டு மீன்பெருக்கம் இடம்பெறுகிறது. பாவளப்பாறைகள் தாவரங்களும் தென்னிந்திய மீனவர்களின் கடல் அட்டை பிடிப்பு முறையினால் சேதமடைந்து மீன்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
தென்னிலங்கை மீனவர்களின் வருகையால் கடல்வளம் முற்றாக அழிவடைந்து வருகிறது.
தென்னிலங்கையிலிருந்து வந்து வாடிகளை அமைத்து அங்கு தங்கியிருப்பவர்கள் மலசல கூடங்கள் எதனையும் அமைக்கவில்லை, கடற்கரை ஓரங்களிலும் கடற்கரையை அண்டிய நிலப்பிரதேசங்களிலும் மலங்கழித்து வருவதுடன் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் உள்ளுர் மக்கள் கடற்கரை ஓரங்களில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் தொற்று நோய்களும் ஏற்படலாம் என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளுர் பெண்கள் அப்பிரதேசத்தில் நடமாட அச்சப்படுகின்றனர். கலாசார சீர் கேடு ஏற்படும் வகையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் கடற்தொழில் செய்ய வந்த தென்னிலங்கை மீனவர்கள் தற்போது அம்மாவட்டங்களில் நிரந்தரமாக குடியேறி அம்மாவட்டங்களின் குடிப்பரம்பல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இவ்வாறு வடமராட்சி கிழக்கிலும் தொழிலுக்கு வந்திருக்கும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் தமது பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள் என்ற அச்சமும் அப்பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தென்னிலங்கை மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து மருதங்கேணி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மீனவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்திருந்தனர்.
மீனவர்களின் முறைப்பாடுகளை அடுத்து 28 நாட்களுக்குள் கடலட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் அறிவித்தல் அப்பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருக்கிறது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் இப்பிரதேசத்தில் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்காத போதிலும் பெரும் பண முதலைகளான தென்னிலங்கை முதலாளிகள் கடற்தொழில் நீரியல் வள அமைச்சிடமிருந்து அனுமதியை பெற்றுள்ளனர்.
வடமராட்சிகிழக்கு மக்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியுள்ள கடலட்டைபிரச்சினைக்கு எதிராக கிளர்ந்த மக்கள் பிரதேசசெயலகத்தில் கடந்த வாரம் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினர்.
ஒரு சிலரின் சுயநலத்தால் தமது கடல் வளம் கண்முன்னே சூறையாடப்படுவதை தொடர்ச்சியாக அனுமதிக்கமுடியாது உயிரைக்கொடுத்தேனும் எம்கடல்வளத்தினை காக்க தயாரென தெரிவித்தனர்.
கடலட்டை பிடிப்போரை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை அடுத்து கடற்படை புலனாய்வு பிரிவினர் என்றும் பொலிஸ் புலானய்வு பிரிவினர் என்றும் தெரிவித்து கொள்வோர் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய மீனவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். படையினரால் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளைவான்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படையினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அப்பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நான்காம் மாடியை பார்க்க ஆசையா? உங்கள் மனைவிமாரை விதவைகளாக பார்க்க போகிறீர்களா? வெள்ளைவானில் கடத்துவோம் என தொலைபேசியில் தம்மை அச்சுறுத்துவதாகவும், தம்மை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொள்கின்றனர் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு சிறிலங்கா படையினர் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனரோ அதே நிலைதான் வடமராட்சி கிழக்கில் இன்றும் தொடர்கிறது
மோட்டார் சைக்கிளில் சில மர்மநபர்கள் தமது கிராமங்களில் நடமாடுவதாகவும் குறிப்பாக இரவு வேளையில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை தொடர்பு கொண்ட தென்னிலங்கை முதலாளிகள் பணம் தருகிறோம், எதிர்ப்பை தெரிவிக்காது அமைதியாக இருங்கள், இல்லையேல் உங்களின் உயிர் இருக்காது என்ற தோரணையில் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பணத்திற்காக தமது கடல்வளத்தை தென்னிலங்கை மீனவர்களுக்கு விற்க முடியாது என உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பிரதேசத்தின் பிரச்சினை மட்டுமல்ல எமது இனத்தின் இருப்பின் பிரச்சினை, யாழ். மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றக் கூடிய அபாயகரமான பிரச்சினை. எனவே வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், யாழ். மாவட்ட அரசஅதிபர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்குமாகாணசபை முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையிலேயே அழகிய கடற்கரையாக வடமராட்சி கிழக்கு கடற்கரை அமைந்துள்ளது. தூய்மையான வெள்ளை நிற மணல்களை கொண்ட இக்கடற்கரை இப்போது தென்னிலங்கை மீனவர்களால் அலங்கோலமாகி நாற்றமெடுத்து வருகிறது.
இப்போது எமது கடற்கரைக்கு செல்லவே அருவருப்பாக உள்ளது, துர்நாற்றம் வீசுகிறது. எங்கள் கடல் வளத்தை அழித்துடன் கடற்கரை பிரதேசத்தையும் நாசமாக்கி விட்டார்கள் என உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்கள் நிலத்தில் நாம் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு பயந்து ஒடுங்கி அடிமைகளாக வாழும் நிலைக்கு வந்துள்ளோம். எமது பிரதேசத்தை விட்டு நாம் அகதியாக செல்லும் நிலை வந்து விடுமோ என அச்சுகிறோம் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக நாம் பொறுமை காக்கமாட்டோம். நீங்கள் வெளியேறுங்கள் அல்லது வெளியேற்ற வைப்போம், நாம் அமைதிகாக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கை முதலாளிமார்களுக்கு வடமராட்சி கிழக்கில் உள்ள சில கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் செயலாளர் போன்றோரும் சில பொதுமக்களும் விலைபோய்விட்டனர் என்றும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிலர் தமது காணிகளை அவர்களுக்கு வழங்கியதாலேயே அங்கு வாடிகளை அமைத்துள்ளனர். உள்ளுர் வாசிகள் சிலர் பணத்திற்கு விலை போய் எமது பிரதேச வளத்தை அழித்து வருகின்றனர் என்றும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதில் அசமந்தமாக இருந்தால் வடக்கு கிழக்கில் எல்லைக்கிராமங்கள் பறி போனதைப் போன்று வடமராட்சி கிழக்கு பிரதேசமும் பறிபோகலாம். தற்போது தற்காலிகமாக வாடிகளை அமைத்து தொழில் செய்து வரும் சிங்கள முஸ்லீம்கள் நிரந்தரமாக குடியேறும் சூழலும் உருவாகலாம்.
இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேசசபையில் தவிசாளர் அ.சா. அரியகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இப்பிரச்சினை பற்றி பேசப்பட்டது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சிலவற்றையும் அண்மையில் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் எடுத்திருந்தார்.
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் இப்பிரச்சினை ஆராயப்பட்டு இப்பிரதேசத்தில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இத்தீர்மானத்திற்கு அமைய 28 நாட்களுக்குள் இவர்கள் வெளியேற வேண்டும் என பிரதேச செயலாளரால் உத்தரவிடப்பட்ட அறிவித்தல்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
ஆனால் பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கும் கொழும்பில் இருக்கும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சு அதிகாரிகளுக்கும் பெருந்தொகை பணத்தை கொடுத்து தமது காரியங்களை தென்னிலங்கை முதலாளிகள் சாதித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் தனது தரப்பு விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்ததில் ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் ஏகோபித்ததீர்மானத்துக்கு அமைய கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் சூட்சுமமான முறையில் சில கபடத்தனமானர்களின் வழிநடத்தலில் கடற்றொழில் சங்க. பிரதிநிதிகள் மற்றும் தனிப்பட்டவர்கள் கொழும்பு நீரியல் வள திணைக்களத்துக்கு அழைத்து செல்லப்பட்டு கடலட்டை பிடிப்பதற்கான. அனுமதிக்கு ஏற்பாடு செய்யப்படட்டதுடன் எம்மை நிர்வகிக்கும் உள்நாட்டு அலுவல் அமைச்சுக்கு அழைத்து செல்லப்பட்டு சங்கங்கள், காணி உரிமையாளர் விரும்பியும் பிரதேசசெயலர் வாடி அனுமதி வழங்க மறுப்பதாக சொல்ல வைக்கப்படுகிறார்கள். இதனால் இனவாதியாக என்னை பார்க்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்
எனவே எடுக்கப்பட்ட. தீர்மானங்ளில் சங்கங்கள் தனிப்பட்டவர்கள் உறுதியாக இருக்கவேண்டும் தனிப்பட்ட நலனுக்கு விலைபோகாது உறுதியாக இருத்தல் வேண்டும்
இவ்வாறான நிலையிருந்தும் பிரதேச செயலகம் வெளியேற்றுவதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளும் எடுத்துள்ளது
கடலட்டை பிடிப்போர் அலுவலகம் அழைக்கப்பட்டு வெளியேற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது
நேரடியாக.பொலிசாருடன் இரு தடவை வாடிக்கு சென்று வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்ப்பட்டது அனைத்து சங்கங்களும் அழைக்கப்பட்டூ வெளியேற்றும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது
வழக்கு தாக்கல் செய்வதற்காக வெளியேற்றும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று வெளியேற்றுமாறு மூறைப்பாடு செய்யப்பட்டது. அறிவித்தலின் படி வெளியேறாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை அழித்து இனப்பரம்பலை மாற்றி அமைக்க நினைக்கும் தென்னிலங்கை முதலாளிகளின் வலையில் பணத்திற்காக உள்ளுர் வாசிகள் சிலர் விழுந்துள்ளனர் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
( இரா.துரைரத்தினம் )