வடமாகாணத்தில் அதிகளவிலான தாதிய உத்தியோகத்தர்களை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை

177

வடமாகாணத்தில் நிலவுகின்ற தாதியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த வருடம் உள்வாங்கப்படுகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் வடமாகாணத்தில் இருந்து உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

வடமாகாணத்தில் நிலவுகின்ற தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பாக வடமாகாண தாதியர் சங்க உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில்,

இதன் அடிப்படையில் 2017 ம் ஆண்டிற்கான தாதிய உத்தியோகத்தர் தெரிவில் முதல் தடவையாக 118 பேர் தெரிவு செய்யப்பட்டமை வடமாகாணத்திற்கு கிடைத்திருக்கின்ற பெரும் வெற்றியாகும்.

மேலும் தாதிய உத்தியோகத்தர் தெரிவில் இருகின்ற வயது கட்டுப்பாட்டு எல்லை கூட்டப்படுவதுடன் தாதிய உத்தியோகத்தர் தெரிவில் ஆண்களின் விகிதாசாரம் ஐந்து வீதத்தில் இருந்து அதிகரிக்க செய்தல், தகுதியான அனைவரையும் உள்ளீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது அதற்கு முந்திய 2 ஆண்டில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றிய மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்ற வரையறை உள்ளது. இதனால் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

இந்த நிலையை நீக்கி இன்னும் கூடிய தாதிய உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் தாக்குதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE