வடமாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உறுதி வழங்கினார். அதற்கான விசேட செயலணியொன்றை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மக்களை ஜனாதிபதி சென்று பார்வையிட்டார். அரச நத்தார் தினத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையில் – அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் அரசாங்கம் பதவிஏற்றதும் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர் ஆனால் எமது ஆட்சியில் நாட்டில் தேசிய பாதுகாப்பு வலுவடைந்துள்ளது. மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கமாட்டோம் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற எமது அரசாங்கம் இடமளிப்பதாக கூறுபவர்களுக்கு நான் அழைப்பொன்றை விடுக்கின்றேன். குறிப்பாக வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கவும் அவர்கள் கொழும்பில் இருந்து வடக்கிற்கு வர என்னால் வாகனம் வழங்க முடியும் கடல் மூலம் வருவதாயின் கப்பலொன்றை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் விமானம் வேண்டுமென்றால் அதையும் ஏற்பாடு செய்துகொடுக்க முடியும். 25 வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்துள்ளேன் அவர்களுக்கு தெரியாமலேயே அங்கு சென்றேன். தேசிய பாதுகாப்புக்கு தொடர்பான பிரச்சினை 25 வருடமாக இடம்பெயர்ந்துள்ள தங்களை மீளக்குடியமர்த்துமாறு கூறினர். இவர்களுக்கு 6 மாதத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்படும் அதற்கு செயலணி ஒன்றை உருவாக்கவுள்ளோம். தேசிய பாதுகாப்பை காட்டி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இப்படி சதிகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நானும் பிரதமரும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார் இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் பளிஹக்கார உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.