கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று (09.08.2018) மாலை 5 மணி அளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பூநகரி பிரதேச சபை பழைய பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உள்ளிட்ட பிரதேச சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த சபைகளில் நிதிப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் அப்பிரதேச மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்குவது தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை எனத் தெரிவித்த உறுப்பினர்கள் அதனைப் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஆளுநரிடம் வேண்டிக்கொண்டனர்.
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக ஆளுநரின் உதவியினை மத்திய அரசின் ஊடாக பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் வடமாகாணத்தில் அரசியல்வாதிகளும் பொது மக்களும் அபிவிருத்திக்காக போராட்டம் நடத்துவது கிடையாது.
தென்னிலங்கையில் நீங்கள் பார்த்தீர்களானால் மக்கள் தமக்கு அபிவிருத்தி வேண்டி கல்வி வசதி வேண்டி நீர் வசதி வேண்டி வீதி செப்பனிட வேண்டும் என வேண்டி பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.
ஆனால் இங்கே யாழ்ப்பாணத்தில் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநராக எனக்கு முன்னர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இருந்தார். அவரை இங்கு இருக்கும் போது யாரும் பாராட்டியது கிடையாது காரணம் அவர் ஒரு ராணுவ அதிகாரி ஆனால் நான் இப்போது இங்கு எங்கு சென்றாலும் அவரால் கட்டப்பட்ட கட்டிடங்களும் வீதிகளும் பாடசாலைகளும் காணப்படுகின்றது. அவர் இருக்கும்போது அவரை பாராட்ட தவறிவிட்டார்கள் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு அம்மாவின் பாசம் நன்றாக தெரியும் அப்பாவின் பாசம் தெரியாது காரணம் அவர் காலையில் சென்று இரவு தான் வீடு திரும்புவார் அப்பாவின் பாசத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நல்ல வேலை செய்தது அவரை பாராட்ட முடியாமல் போனது. இப்போது சாந்தியும் சமாதானமும் நிலவுகின்றது. ஜனநாயகம் வளர்ந்திருக்கின்றது. ஜனநாயகம் கிடைத்திருக்கின்றது. ஆனால் அபிவிருத்திப் பணிகள் குறைவாக இருக்கின்றது.
நீங்கள் ஒரு நிமிடத்தில் அளிக்கும் வாக்கு அவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு அதிகாரம் அளிக்கிறது நீங்கள் வாக்களித்துவிட்டு வீட்டிலேயே சும்மா இருக்கின்றீர்கள் அவர்கள் வாக்கினை பெற்றுக் கொண்டு சும்மா இருக்கின்றார்கள். ஐந்து வருடங்கள் சும்மா இருக்கிறார்கள் இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் அபிவிருத்தியை அடைவதற்கான எந்த நேரமும் முயற்சி எடுக்க வேண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.