வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் 08.08.2016 அன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இக்கூட்டத்தில் இணைந்த நேர அட்டவணையை செப்டம்பர் 1 தொடக்கம் அமுலாக்குவது தொடர்பாகவும், இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே பயண ஆரம்ப இடத்தில் இருந்து சேவையை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஒரே இடத்தில் இருந்து பயணிகள் சேவையை வழங்குவதில் பிரச்சினை இல்லையெனவும் அங்கு பேருந்து நிலையங்கள் அதற்கமைவாக உள்ளது எனவும், வவுனியா மாவட்டத்தில் இன்னும் ஒரு மாத காலத்தில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டவுடன் இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் யாழ் மாவட்டத்தில் பொதுவான பேருந்து நிலையம் அமைப்பதில் இடப்பிரச்சினை நிலவுவதாகவும் அதற்கு தற்காலிகமாக தீர்வை வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுவான பேருந்து நிலையம் அமைத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள் மற்றும் புதிதாக பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.