வடிகான்களின் மூடிகள் மூடப்படாமையினால் மக்கள் அசௌகரியம்

221

தலவாக்கலை நகரில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரங்களில் அமைக்கப்பட்ட வடிகான்கள் பல மூடியிடப்படாமலும் ஆங்காங்கே சில மூடிகள் உடைந்தும் காணப்படுவதால் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் தலவாக்கலை நகரிலிருந்து தலவாக்கலை நகரசபை வரையிலான பிரதான வீதியில் இருமருங்கிலும் காணப்படுகின்ற வடிகான்களே இவ்வாறு உடைந்த நிலையிலும் மூடப்படாமலும் காணப்படுகின்றன. 100க்கு மேற்பட்ட குழிகள் ஆங்காங்கே மூடப்படாமல் காணப்படுகின்றன. இதன் மேல் காணப்பட்ட மூடிகள் சில உடைந்தும் காணப்படுகின்றன. தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பாடசாலை மாணவர்கள், நகரசபை ஊழியர்கள் மற்றும் அப்பிரதேசத்தை அண்டிய கூம்மூட், மிடில்டன் தோட்ட பகுதி மக்கள் இந்த வடிகான்களை கடந்தே செல்கின்றனர். ஒவ்வொரு வடிகான்களும் ஏறத்தாழ 3 அடி ஆழமாக தோண்டப்பட்டுள்ளதுடன் மூடிகள் உடைந்தும் மூடிகள் இடப்படாததன் காரணமாக பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் இவ்வடிகான்களில் தவறி வீழ்ந்த சிலர் லிந்துலை மற்றும் நுவரெலியா ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை சிலர் வடிகான்களில் தவறி விழுந்து காயங்களுக்குள்ளாகி சத்திர சிகிச்சை செய்துகொண்டவர்களும் உள்ளனர். இவ்வாறு எண்ணில் அடங்காத விபத்துக்கள் அன்றாடம் இடம்பெற்று வருகின்றன. பல தடவைகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை காலமும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தலவாக்கலை பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தலவாக்கலை நகர வீதிகளில் மூடப்படாமல் காணப்பட்ட வடிகான்கள் அதன் மூடிகளை கொண்டு மூடப்பட்டன. இருந்தும் தலவாக்கலை நகரசபை மற்றும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தை அண்மித்த வீதியில் காணப்படும் வடிகான்களில் போடப்பட்டிருந்த மூடிகள் பல உடைந்து காணப்படுகின்றமையாலே பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் வீதியை கடந்து செல்லும்போது தவறி வடிகான்களில் விழுகின்றனர். மேலும் இரவில் நடமாடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் வீதியை கடந்தால் மாத்திரமே காயங்கள் ஏற்படாமலும் விழாமலும் செல்ல முடியும். எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed (1)

unnamed (2)

unnamed

SHARE