அபு அலா, மட்டு.துஷாரா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைக்கப்பெறுவதற்கான ஆணையை எமது மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான வழி வகைகளை எமது கட்சியும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

அதேபோன்று எமது மட்டு.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் தேவைகளையும், குறைபாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றெண்ணி, உங்களது சீலாமுனை வட்டாரத்தில் இளம் துடிப்புள்ள ஒருவரான சுதர்சனை எமது கட்சி களமிறங்கியுள்ளது. அவரை வெற்றிபெறச் செய்து உங்களின் பிரதேச தேவைகளை நிவர்த்தி செய்யகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக் கட்சியின் 11 ஆம் வட்டார சீலாமுனை, பெரிய உப்போடை மற்றும் சின்ன உப்போடை வேட்பாளர் த.நடராசா சுதர்சன் தலைமையில் (24) சீலாமுனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டு. மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆணையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஏனென்றால் மாநகர சபையில் அதிகளவான வளங்கள் காணப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாநகர சபையினுடைய ஆட்சிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் சபைக்குள் இருந்த பல நிதிகளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களாக இருந்த பிள்ளையான் போன்றோர் கையாடல்களை செய்திருந்தார்கள்.
அதுமாத்திரமல்லாமல், மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பல வளங்களை எடுத்து பல சட்ட விரோதமான செயல்களும் நடந்து இருக்கின்றது. இந்த விடயங்களில், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாநகர சபைக்குள் இருந்த இலங்கை தமிழரசு கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் மிக நேர்மையாக செயல்பட்டார்கள் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பாக, சீலாமுனை பகுதியின் ஆற்றங்கரையோரத்தை ஒரு சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதான சிறந்த முன்மொழிவுகளை எமது வட்டார வேட்பாளர்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள். இவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மாநகர சபை எல்லைக்குள் வருமானங்களை அதிகரிக்கக்கூடிய சில திட்டங்களாக அவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில், இந்தத் தேர்தல் வட்டாரத் தேர்தலையும் தாண்டி, தமிழ் இனத்திற்கான ஒரு தேர்தலாக கருத்தில் எடுத்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்