வட்டுக்கோட்டை கார்த்திகாவின் கொலையின் பின்னணி…? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்.

312

கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ரங்கன் கார்த்திக்காவினது என்று அடையாளம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கார்த்திகாவின் கணவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைத்து நபர் ஒருவர் தூக்கிவரும் காட்சி சி.சி.ரி.வி கமராவில் நன்கு பதிவான நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் மற்றும் முகநூல்களில் பலரும் பார்வையிட்டு வருவதையும் காண முடிகின்றது.

கார்த்திகாவின் படுகொலைக்கு அடிப்படைக் காரணம் என்னவென்பதில் பொலிஸ் தரப்பு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

குடும்ப பிரச்சினையே இறுதியில் இவ்வாறான நிலை அவருக்கு ஏற்படக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த கார்த்திகாவின் சடலத்தை அடையாளம் காண்பிப்பதற்காக அவரது தாயார் கடந்த 30ம் திகதி இரவு வட்டுக்கோட்டையில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளார்.

எனவே, புறக்கோட்டை பொலிஸார் தொடர்ச்சியாக இது தொடர்பாக கார்த்திகாவின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கார்த்திகா தொடர்பான பல்வேறு விடயங்கள் தெரியவந்திருக்கின்றன.

ரங்கன் கார்த்திகா வட்டுக்கோட்டை சங்கரத்தை, ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் அதே ஊரை சேர்ந்த மாற்று சாதி ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 2009ம் ஆண்டு கணவருடனும் குழந்தையுடனும் கொழும்புக்கு வந்து குடியேறியுள்ளார். அதன்பின் 2010ம் ஆண்டு கணவன் சவூதிக்கு செல்ல, இருவருக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

கணவன் அதிகமாக கார்த்திகா தொடர்பாகவும் குழந்தை தொடர்பாகவும் அக்கறை கொள்ளாத நிலையிலேயே இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய தருணத்தில் தான் விடுதியில் கார்த்திகாவுடன் தங்கியிருந்ததாக கூறப்படும் சந்தேக நபருக்கும் கார்த்திகாவுக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் 3 வருடங்களாக கணவன் – மனைவி போலவே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே கடந்த 29ம் திகதி காலை கொழும்பு, புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியொன்றிலிருந்து கார்த்திகா சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் அவர்கள் இருவரும் செட்டியார் தெருவிலுள்ள விடுதி ஒன்றில் 22 ம் திகதியிலிருந்து 28ம் திகதி வரை சுமார் 7 நாட்கள் தங்கியிருந்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக விடுதியின் முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

நான் இந்த விடுதியில் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றேன். இங்கு 16 அறைகள் உள்ளன. வட பகுதியிலிருந்து வரும் பெரும்பாலானவர்கள் இங்கு தான் வந்து தங்குவார்கள்.

குறித்த இருவரும் 22ம் திகதி இங்கு வந்தார்கள். வரும்போதே குறித்த பெண்ணின் சூட்கேஸூடன் சேர்ந்து மேலும் 3 பொதிகளும் இருந்தன. பார்ப்பதற்கு இருவரும் கணவன், மனைவியைப் போலவே இருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, அவர்களிடம் சமையல் பொருட்களும் இருந்தன. எனவே, நான் அவர்களிடம், ”ஏன்? இவ்வளவு பொருட்கள்” என்று கேட்டேன்” அதற்கு குறித்த நபர் நாங்கள் கொழும்பில் வாடகைக்கு வீடு ஒன்றை தேடுகின்றோம் ஒரு கிழமையில் கிடைத்து விடும் என்று கூறினார். அதுவரையில் இங்கு தங்கியிருப்பதாக கூறினார்கள்.

நாங்களும் எவ்வித தயக்கமுமின்றி அனுமதி வழங்கினோம். மேலும் அறையின் சாவியை கொடுப்பதற்கு முன் தங்க வருபவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்குவது வழமை.

எனவே அன்றும் அவர்களிடம் தேசிய அடையாள அட்டையை தருமாறு கேட்ட போது குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டையை மட்டுமே எங்களுக்கு கொடுத்தார்கள்.

எனினும், நான் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்காக முதலாம் மாடியில் 5 ஆம் இலக்க அறையை ஒதுக்கி கொடுத்தேன். அதன்பின் பெரிதாக அவர்களிடம் எதுவும் நான் கதைக்கவில்லை.

முதலில் மூன்று நாட்களுக்குரிய வாடகை பணத்தை தந்தார்கள். மேலும் இருவரும் புதிதாக திருமணம் முடித்தவர்கள் போல் மிகவும் அந்நியோன்னியமாக பழகினார்கள்.

எனவே, எனக்கு அவர்கள் தொடர்பாக எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. அந்த பெண் பார்ப்பதற்கு நவ நாகரிக உடைகளுடனேயே எப்போதும் காட்சியளித்தார்.

இருவரும் மூன்று வேளை உணவினை எடுப்பதற்காக வெளியில் சென்று வருவார்கள்.

சம்பவத்துக்கு முதல் நாள் இரவு தான் இருவரையும் ஒன்றாக கண்டேன். அந்த நபர் கணவனா, காதலனா என்று தெரியாது. அதன்பின் மறுநாள் காலை 8.20 மணியளவில் நான் விடுதிக்கு சென்ற போது அவர் கொண்டு வந்த சூட்கேஸூகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்.

இறுதியாக பெரிய சூட்கேஸை அறையிலிருந்து வெளியில் எடுத்து கொண்டு போகும் போதே அவர்கள் தங்கியிருந்த அறையின் அருகே சென்றேன்.

அவர் மிகுந்த சிரமத்துடனேயே அதை எடுத்து சென்றுகொண்டிருந்தார்.

எனவே, அதற்கு பிறகு அறை சாவியை என்னிடம் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணின் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.

அன்றிரவு நான் பேஸ்புக் கணக்கில் எனது நண்பருடன் தொடர்பிலிருந்த போது எனது நண்பர் ஒருவரே இது பற்றி கூறினார். உடனே நானும் அந்த புகைப்படத்தை பார்த்தேன். எனக்கு அது பெரிதும் அதிர்ச்சியாய் இருந்தது.

எங்களுடைய விடுதியில் தங்கியிருந்த பெண் தான் அது என்பதை நான் இனங்கண்டுகொண்டேன். உடனே சீ.சீ.ரி.வி கெமராவிலுள்ள பதிவுகளை பார்த்து அதை உறுதிப்படுத்திக்கொண்டு பொலிஸாருக்கு இது தொடர்பான தகவலை வழங்கினேன் என்று அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து குறித்த சந்தேக நபரை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதியிடம் கேட்ட போது,

நான் இதற்கு முன்னர் குறித்த சந்தேகநபர் தொடர்பாக எதுவுமே அறிந்திருக்கவில்லை.

அன்று கடந்த 29ம் திகதி தான் முதல் முறையாக நான் அவரை சந்தித்தேன்.. காலை 8.00 – 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரமது. அவர் என்னிடம் வந்து புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும்.என்று கூறினார். உடனே நானும் சம்மதித்தேன்.

அவர் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பொதிகளை வாகனத்தில் ஏற்றினார். இறுதியாக மிகுந்த சிரமத்துடன் பெரிய சூட்கேஸ் பெட்டியொன்றை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்.அப்போது நானும் அவருக்கு சற்று உதவினேன்.

மேலும், இந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கின்றது. இவ்வளவு பாரமாகவிருக்கின்றது? என்றும் வினவினேன். எனினும் அதற்கு அவரிடமிருந்து மௌனம் மட்டுமே எனக்கு பதிலாக கிடைத்தது.

அதுமட்டுமின்றி, என்னுடன் வாகனத்தில் பயணிக்கும் போதும் கூட என்னிடம் அவர் எதுவுமே பேசவில்லை. பின் புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் இறங்கினார்.

இதன்போது அவர் பதற்றத்துடன் காணப்பட்டதை என்னால் அவதானிக்க முடிந்தது. இறங்கும் போது எனக்கு முச்சக்கர வண்டி கட்டணமாக ரூபா 150 வழங்கினார் என அவர் கூறினார்.

இந்நிலையில் கார்த்திகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்திய போது உயிரிழப்புக்கான தெளிவான காரணத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவரது உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் செட்டியார் தெருவிலுள்ள விடுதியில் இருவரும் விடுதிக்கு வருவது மற்றும் இறுதியாக இவர்கள் தங்கியிருந்த 5ம் இலக்க அறையிலிருந்து சந்தேக நபர் 3 அடி நீளம் 2 அடி அகலம் மற்றும் 1 அடி உயரமான கறுப்பு நிற சூட்கேட்ஸ் பெட்டியொன்றை மிகுந்த சிரமத்துடன் விடுதி அறையிலிருந்து வெளியில் எடுத்து வருவது போன்ற காட்சிகள் சீ.சீ.ரி கமராவில் பதிவாகியுள்ளதால் சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அத்துடன் அந்த சூட்கேட்ஸ் பெட்டியை பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றமைக்கான ஆதாரங்களாக சீ.சீ.ரி.வி காட்சிப் பதிவுகளையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

எனவே கார்த்திகாவுடன் விடுதியில் தங்கியிருந்தவர் யார்? அவரது கணவனா? என்ற பின்னணியில் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாரின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கார்த்திகாவின் கணவர் என்று சந்தேகிக்கப்படும் 34 வயதான நபரொருவரையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது மேலும், இவரிடமும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.colombo_killing_girl 01colombo_killing_girl

SHARE