
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வடக்கு மக்களின் அன்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நாட்டுக்கு பயனுள்ள வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படும்.
தேவையான திருத்தங்களுடன் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவளிக்கப்படுகின்றன.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் வாழ்வதனைப் பார்ப்பதே எமது நோக்கமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கும் வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதற்கும் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படுகின்றது.
30 ஆண்டு கால பேரை முடிவுக்குக் கொண்டு வர மஹிந்த ராஜபக்ச மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
போரின் பின்னர் வடக்கில் தேர்தல் நடத்தி ஜனநாயக ரீதியில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். எனினும், வடக்கு மக்களின் அன்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
பொருளாதார ரீதியில் நலிந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் காணப்பட்டாலும் நல்லிணக்க ரீதியில் ஓரளவான காரியங்களை செய்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னதாக தேர்தல் சட்டங்களை மீறினால் காலுக்கு அல்ல தலைக்கு துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கோரிய தேர்தல் ஆணையாளர் இன்று தேர்தல் பற்றி தம்மிடம் கேட்க வேண்டாம் என கூறுகின்றார்.
இவ்வாறான ஓர் நிலையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எதற்கு? 19ம் திருத்தச் சட்டத்தின் பயன்தான் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார்.