வட மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுகள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகோடுகள் குறித்த ஆராய்ந்து அடுத்த மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண ஊழல் விசாரணை குழுவின் தலைவரும், மாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். தமது குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
– கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்கும் குழவில் ஏழு பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்தக்குழுவின் ஆரம்பக் கூட்டம் கடந்தமாதம் இடம்பெற்றது. இதன்போது 01.01.2010 இல் இருந்து 31.03.2015 வரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணையை மேற்க்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது. ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக பொதுமக்களிடமிருந்த பல விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று திங்கட்கிழமை தொடக்கம் விசாரணைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாத காலத்தில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வட மாகாண சபைக்கு உட்பட்ட பொதுச் சேவை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட விடயங்களே ஆராயப்படவுள்ளன. இன்று மட்டும் முறையற்ற நியமனங்கள் சம்பந்தமாக 59 முறைப்பாடுகளும் முறையற்ற பதவி உயர்வுகள் சம்பந்தமாக 18 முறைப்பாடுகளும் முறையற்ற இடமாற்றங்கள் சம்பந்தமாக 09 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த காலத்தில் இத்தகைய அநீதிகள் நடந்து இருந்தால் அவற்றை இனங்கண்டுகொள்வதனூடாக, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் நாம் எமது திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.