வட மாகாண சபையின் வாலாக செயற்பட தயாரில்லை! – ரிஷாத் பதியுதீன்

238

625.256.560.350.160.300.053.800.461.160.90

மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக்கொண்டு, அதன் வாலாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழ் குடியேற்ற வேண்டும்.

வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றி அவர்களை நிம்மதியாக வாழ வைக்கவென உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

செயலணியின் நோக்கங்களை திரிவுபடுத்தி அதன் எதிர்கால நடவடிக்கைகளை கறுப்புக் கண்ணோடு பார்த்துவரும் வடக்கு மாகாண சபையின் போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபை கடந்த 3 வருட காலம் பதவியில் இருந்து வருகின்றது.

1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னும் தென்னிலங்கையில் பல இடங்களில் முகாம்களிலும் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வட மாகாண சபையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு இன்று வரை துளியளவேனும் உதவவில்லை.

உதவாவிட்டாலும் பரவாயில்லை உதட்டளவிலேனும் ஆதரவளிக்கவுமில்லை. இந்நிலையில், மத்திய அரசு தற்போது முன்னெடுத்துள்ள மீள்குடியேற்றக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கு வட மாகாண சபை முன்னிற்பது வேதனையானது.

அது மனித தர்மமும் அல்ல. அகதிகளாக வாழும் இந்த மக்கள் படுகின்ற அவஸ்தைகளை கண்டும் காணாதது போன்று செயற்படும் இந்த மாகாண சபையின் நடவடிக்கை குறித்து முஸ்லிம் மக்களுக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலையில், காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் கோரிக்கை விடப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE