வத்தளையில் தமிழ் பாடசாலை உருவாகுவதை இனவாதத்துடன் பார்க்காதீர்கள் – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

253

வத்தளை ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன். இதற்கான அடிக்கல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது. இதற்கு அப்பிரதேசத்தில் உள்ள பெருபான்மை இன மக்கள் இனவாதத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் இனவாதத்துடன் நடந்துகொள்வதையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

வத்தளையில் தமிழ் பாடசாலையின் தேவை குறித்து பல வருடங்காக பேசப்பட்டு வந்தன. இப்பிரதேசத்தில் செறிந்து வாழும் தமிழ் மக்களின் பாரிய தேவையாகவும் குறைபாடாகவும் இந்த தமிழ் பாடசாலை தேவை பிரச்சினை இருந்து வந்துள்ளது. தற்போது இது இனிதே நிறைவேற பலர் ஆரம்பகாலம் தொட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவ்வப்போது இருந்த அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை கொடுத்தும் உள்ளனர்.  தற்போது சிலர் முயற்சித்த முயற்சியால் திடீர் என இது முளைக்கவில்லை. அமைச்சர் மனோ கணேசன் இந்த விடயம் தொடர்பில் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருந்தும் ஒரே அரசாங்கத்தில் இருக்கும் இவரை இந்த நிகழ்வில் இனைத்துக்கொள்ளாமை வருந்ததக்கது. நானும் கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்றேன் எனக்கும் அழைப்பு கிடைக்கவில்லை. இங்கு இந்த பாடசாலை அமைவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது பங்கும் உள்ளது. கல்வி அமைச்சில் இந்த பாடசாலை உருவாகுவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளேன்.
எங்கள் இருவருக்கும் அழைப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் இவர்கள் செய்த நல்ல காரியத்தை தூற்றவில்லை வாழ்த்துகின்றோம். இதற்காக பிரச்சினைகளை உருவாக்கி நல்ல காரியத்திற்கு தடையாக இருக்க விரும்பவில்லை. யார் நெல்லை குற்றினாலும் பரவாயில்லை அரிசி வந்தால் போதும்.

அந்த வகையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் தனது பிரதேசத்தில் தமிழ் மக்கள் குறித்து செயற்பட்டு வரும் விதம் குறித்து நான் பெருமை அடைகின்றேன். இனி குறித்த பாடசாலையின் அவிருத்தி குறித்து எதிர்காலத்தில் எனது பங்கு அதிகமாக இருக்கும். தற்போது இலங்கையில் காணப்படும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கும் நான் இந்த பாடசாலைக்கு தேவையான ஏனைய தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்கின்றேன்.

2001 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்கள் வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு தனது அமைச்சில் இருந்து 20 லட்சம் நிதியை ஒதுக்கி கொடுத்துள்ளார். அதற்கு பிறகு வந்த சில அமைச்சர்களும் பண ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பழமையை மறந்து சிலர் செயற்படுவது வருந்ததக்கது. தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் விபரிக்கவேண்டும்.  தெரிந்தவர்களிடம் கேட்டு செயற்பட வேண்டியது கட்டாயமானதாகும் என்று கூறினார்.

தகவலும் படங்களும்:- பா.திருஞானம்

 

 

SHARE