அண்மைக்காலமாக இரவோடு இரவாக சிலைகள் வன்னிப் பெரும் நிலப்பரப்பில் திறந்து வருவதாக வடமாகாணசபையின் உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கடந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கினைப்புக் கூட்டத்தில் தெரிவித்திருந்த விடயங்கள் அரசியல் ரீதியான சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக பிரதேச சபையினுடைய அனுமதியின்றி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் முல்லைத்தீவில் காந்தி சிலையை நிறுவுவதற்காக அடித்தளமிட்டுள்ளார். இதற்கான முறைப்படி உத்தரவு பெறவில்லை என்பது மாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் குற்றச்சாட்டாகும். அதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் ஒன்றை மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி திறந்துள்ளார் என்பது பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் குற்றச்சாட்டு ஆகும். இப்படி இருவருக்குமிடையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இறுதியில் தமிழ் மக்கள் காணப்போவது என்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாணசபையும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே பல விடயங்களை கை ஆழ முடியும். அரசியலில் போட்டி நிலவலாம் பொறாமை நிலவக்கூடாது. பொறாமை நிலவக்கூடுமாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே சிறந்ததாகும். போட்டி போட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று செயற்படுவது சிறந்த மனப்பாங்கு ஆகும். இதில் கௌரவ மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களினால் கூறப்பட்ட விடயத்தை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அனுமதியின்றி சிலைகள் திறக்கப்படுகின்ற பொழுது இதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிங்களவர்கள் பிரதேச சபையினுடைய அனுமதியின்றி புத்தர்சிலைகளை அங்காங்கே திறக்க முன்வருவார்கள்.
ஆகவே நாம் மக்கள் பிரதிநிதிகள் என்று முல்லைத்தீவில் மக்களோடு மக்களாக வசித்து வருகின்றோம் முற்கூட்டிய இவ்வாறு சிலைகள் திறக்கப்படப் போவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் அறிவித்திருந்தால். நாம் அவ்வாறு கேள்விகளைக் கேட்கவேண்டிய தேவையில்லை. இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் தமது சக உறுப்பினர்களை வைத்துக் கொண்டு சிலைகளைத் வன்னிமண்ணில் அங்காங்கே நிறுவது ஆனது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையே ஒரு கருத்து முரண்பாட்டை தோற்றுவித்துக் கொண்டே செல்லும். காந்தி சிலை திறப்பதற்கு நான் எதிரானவன் இல்லை. அதே நேரம் முல்லை மண்ணில் பண்டாரவன்னியனின் சிலை திறப்பதென்றே மாகாணசபையில் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு அது நடைமுறையில் உள்ளது. கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும் என்பது போல் தற்பொழுது சிலை திறக்கும் விடையம் மாறிவிட்டது. இவ்விடயத்தில் ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடக்கவேண்டும். என்னையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனையும் சண்டையில் மூட்டிவிடும் விடையங்களை ஒரு சில இலத்திரணியல் ஊடகங்கள் செய்து வருகின்றது. இது அரசியல் வாதிகளினுடைய பின்னணியில் செயற்படுபவர்களாகவே நான் கருதுகின்றேன்.
காந்தி சிலை திறப்பதற்கு நான் எதிரானவன் என்ற நிலைப்பாட்டை ஒருசில ஊடகங்கள் கொண்டுவர முனைகின்றது. இந்தக் கருத்துப் பரிமாறப்பட்டது ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அதிலேயே இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் முற்றுப்பெற்றிருக்கவேண்டும். இனி ஒரு முறை இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்கள் தேவையென்றால் ஒருங்கிணைக்குக் கூட்டத்தில் கலந்து கொள்ள நான் தயார் என்று குறிப்பிட்டார். இவ் சிலை திறப்பு விடையத்தில் புறமுதுகில் குத்தும் எண்ணம் எனக்கில்லை. 2017ம் ஆண்டு தை அல்லது மாசி மாத்தில் பண்டாரவன்னியனின் சிலை முல்லைமண்ணில் திறக்கப்படும் என்பதனையே நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்விடயம் தொடர்பாக வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்ற பொழுது ……
வன்னிப் பெரும் நிலப்பரப்பில் பல இடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. கேப்பாப்பிளவு பகுதியில் சமரசிங்க வீதி நிர்மானிக்கப்பட்டுள்ளது, இதைவிட கூடுதலாக இராணுவ நினைவுத் தூபிகள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை வன்னிமாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை. இது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளேன். இதனால் எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகாவுக்குமிடையில் விவாதங்கள் ஏற்பட்டது. தற்பொழுது காந்தி சிலை திறக்கும் விடையத்தில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் போர்க்கொடி தூக்குவதன் பின்னணி என்னவென்று ஆராயப்படவேண்டும் என்பதனையும் அவர் சுற்றிக்காட்டினார்.
எது எவ்வாறாக இருப்பினும் சிலை திறப்பு விடையத்தில் அரசியல் வாதிகள் மோதிக்கொள்ளும் விடையமானது அருவருக்கத் தக்கது. இதில் அரசியல்ப் பின்னணி பல இருந்தாலும் நாம் அனைவரும் கூட்டமைப்பின் கீழ் அரசியலுக்குல் வந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. குறிப்பாக மறைந்த வடமாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனின் மக்கள் செல்வாக்கை முல்லைமண்ணில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை உறுப்பனர் ரவிகரன் தக்கவைத்துக் கொள்வது என்ற போட்டியும் நிலவுவதாக அப் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். மறைந்த அன்ரனி ஜெகநாதன் அவர்களுடைய நல்லடக்கத்தை ஒழுங்குமுறையில் தானே முன்நின்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் நடத்திவைத்தார். இது அங்கிருக்கும் அமரர் அன்ரனி ஜெகநாதனின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு செயலாகவும் பார்க்கப்படுகின்றது. அரசியல் விவேகம், இடம், பொருள், ஏவல் என்பது மிக முக்கியம். இருப்பினும் அரசியலில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றது. ஈபிஆர்எல்எப் கட்சியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியுடன் தனது செயற்பாடுகளை வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் செயற்படுத்தி வருகின்றார். இதனால் ஈபிஆர்எல்எப் கட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இழந்தது பெரியதொரு இழப்பாகும். வன்னி அரசியலையும் தன்வசப்படுத்திவரும் வைத்திய கலாநிதி சிவமோகன் காலப்போக்கில் எமது கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் இறங்கிவருகின்றார் என்றக் குற்றச்சாட்டுக்களும் வன்னிப் பிரதேசத்தில் எழுப்பப்பட்டு வருகின்றது. ஈபிஆர்எல்எப் கட்சிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே கட்சியிலிருந்து விலகியதாக வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் சிறு கருத்தொன்றை தெரிவித்திருந்தார். விலகிய நாளிலிருந்து இன்று வரை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தனது தனிப்பட்ட அரசியலையே செயற்படுத்தி வருகின்றார். இது ஒரு புறம் இருக்க ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களையும் அவர்களுடைய செயற்பாடுகளையும் முடக்கும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. ஆகவே எது எவ்வாறாக இருப்பினும் அனுமதியின்றி புத்தர் சிலை திறப்பதென்பது அல்லது ஏனைய அரசியல் வாதிகள் அவ்வாறு செயற்படுவதென்பது பிழையானதொன்று சிலை திறக்கும் விடையத்தில் பராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நிதி ஒதுக்கப்பட்டு அதிலிருந்து அவர் செய்வாராக இருந்தால் அதே பிரதேசசபையே அனுமதி நடைமுறைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை அவர்கள் பார்க்கத் தவறியது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயும், மாகாணசபை உறுப்பினர்களுடையேயும் பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு பலர் முயற்சி செய்கின்றனர். சட்டத்திற்கு முரணாக யார் செயற்படுகின்றார்களோ அவர்கள் பிழையானவர்கள் என்றே கருதப்படுவார்கள். இதை வைத்து அரசியல் செய்யும் நோக்கில் செயற்படுவார்களாக இருந்தால் இறுதியில் அவ்விடத்தில் புத்தர் சிலை அமைக்கும் நிலமையே உருவாகும். உதாரணமாக பொருளாதார மத்திய மையம் அமைக்கும் விடையம் அரசியல் மயமாக்கப்பட்ட விடையம் இதில் தோற்றுப் போனவர்கள் அரசியல் வாதிகள் அல்ல, ஏமாந்தவர்கள் அரசியல் வாதிகள் அல்ல. இதில் தோற்றுப் போனவர்களும், ஏமாந்தவர்களும் பொது மக்களே! தமிழன் ஒன்றைச் செய்கின்ற பொழுது அதனைத் தடுப்பவன் தமிழனாகவே இருக்கின்றான். இதனை அன்று தொட்டு இன்று வரை சிங்களவர்கள் மிக லபகரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை விளங்கிக் கொண்டு தமிழ் அரசியல் வாதிகள் ஒற்றுமையோடு செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.