வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது. வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சாடல்.

365

 

வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது. வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சாடல்.
2009 இறுதி யுத்தத்தின் முடிவில் உறவினரின் கண்ணுக்கு எதிரே ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், உறவினர்களின் முன்னே கைது செய்யப்பட்டவர்கள், முகாம்களில் கைது செய்யப்பட்டவர்கள், வைத்திய சிகிச்சைகளுக்காக முள்ளிவாய்க்காலில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்டவர்கள் என பெருந்தொகையானோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டபின் காணாமல் செய்யப்பட்டனர். நம்பிக்கையுடன் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் தமது உறவுகளாவது திரும்பி வருவார்கள் என காத்திருந்தனர்.
இன்றைய சிங்கள பேரினவாத அரசோ மகிந்த அரசிற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியாயின் எவ்வித குற்றமும் சாட்டப்படாது வழக்கு பதிவு செய்யப்படாது  தொடர் விசாரணை கைதிகளாக இருப்பவர்கள், வழக்கு பதிவு செய்தும் பல பத்து வருடங்கள் இழுத்தடிப்பு செய்தவர்கள் எல்லாம் அரசியல் கைதிகள் அல்லாது வேறு எந்த வகையை சேர்ந்தவர்கள்.
தேர்தல் முறையை மாற்ற பலதடவை அமைச்சரவையை கூட்டுபவர்களால் தமிழனுக்கு நீதி வேண்டி ஒரு கூட்டத்தையேனும் கூட்டினார்களா. ஐநா சபையின் தருஸ்மன் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட காணாமல் செய்யப்பட்டோர் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், போர்க்குற்றம் புரிந்தோர், ஏன் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் கூட மீண்டும் தேர்தலில் போட்டியிட போட்டி போடுகிறார்கள்.
ஆனால் வன்னியில் காணாமல் செய்யப்பட்டோரின் குடும்பங்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். பொறுப்பு கூறாதவரை இன நல்லிணக்கம் சாத்தியமற்றது என மனித உரிமைகள் ஆணையாளர் மட்டுமல்ல உலக வல்லரசுகளே பலதடவை வெளிப்படுத்திவிட்டன. ஆனால் இங்கே தமிழ் மக்களின் அடிப்படை நீதிகளே மறுக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகள் சிறைகளில் தங்கள் காலங்களை போக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்லாட்சி என்றால் என்ன அர்த்தம் என்பது எமக்கு புரியவில்லை. சிங்கள மக்களின் மனம் கோணாமல் தமிழ் மக்களின் மேல் அடக்குமுறைகளை ஏவிவிடுவதுதான் நல்லாட்சியோ தெரியவில்லை. இறுதியில் êலைக்கு வரும் ஐ.நா அறிக்கை செப்ரம்பருக்கு வரும் ஐ.நா அறிக்கை என்று காத்திருந்து தமிழனுக்கு என்ன நியாயம் கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை. வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது என்பது மட்டும் தெளிவாகிறது.
SHARE