இன்று (07.05.2016) காலை 9.00 மணியளவில் வவுனியா தாண்டிக்குளத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கோரி மக்களின் பாரிய அமைதிப்போராட்டம் வவுனியா மொத்த வியாபார நிலயத்தில் இருந்து தொடங்கியது.
அங்கு கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்..
ஒட்டுமொத்த வன்னி மாவட்டத்திற்காக இவ்வருடத்தில் 2000 (இரண்டாயிரம்) மில்லியன் ரூபா செலவிலான பொருளாதார மத்திய நிலயம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது போன்ற மத்திய பொருளாதார வலயங்களை நாடுபூராகவும் அமைக்க மைத்திரி அரசு தீர்மானித்திருந்தது. நாடு பூராகவும் பலபத்து அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறையில் தொடங்கப்பட்ட நிலையில் வவுனியா மொத்த வியாபார நிலயத்துக்கென தீர்மானிக்கப்பட்ட வேலைத்திட்டம் உரிய காணி வழங்கல் செய்யாமல் வடமாகாண சபை முடக்கியுள்ளது கவலைக்குரிய நிகழ்வு, கால இழுத்தடிப்புக்கள் செய்தது மக்களை போராடும் நிலைக்கு கொண்டுவந்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
வவுனியா அரச அதிபர் பணிமனையில் மேற்படி விடய முடிவுகள் எடுப்பதாக நடாத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் கலந்து கொள்ளாதவர்கள் தங்களது அதிகாரங்களை மக்களிடையே திணிக்க முற்படக்கூடாது. தங்களுக்கான பதவிகள் மக்களின் வாக்குகளால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதனை முதலமைச்சர் மறந்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
மேலும் தாண்டிக்குளம் பண்ணையில் பஸ் நிலையம் அண்டிய காணியையே உரிய மத்திய அமைச்சர் கடிதம் மூலம் சிபார்சு செய்துள்ளார். எனவே அதனை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த அமைதிப்பேரணியில் பெருந்திரலான பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியாபார சங்கங்கள், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.






